திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாயாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது.
சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்த புராணச் சிறப்பு வாய்ந்த தலம் திருச்செந்தூர். இதனால் இங்கு நடைபெறும் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்புவாய்ந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்தஆண்டு கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி – தெய்வானை அம்மனுடன் யாகசாலையில் நேற்று காலை 6 மணிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின. மதியம் மகா தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்புஅலங்காரத்தில் சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி கிரி பிரகாரம் உலா வந்தார்.
சஷ்டி விரதம் தொடக்கம்: கந்தசஷ்டி திருவிழா தொடங்கியதை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி, பச்சை நிற ஆடை அணிந்து கோயில் கிரி பிரகாரத்தில் அங்க பிரதட்சணம் செய்து விரதம் தொடங்கினர்.கோயிலில் ஆறு நாட்களும் தங்கிவிரதம் இருப்பவர்களுக்காக கோயில் வளாகத்தில் 21 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ம் தேதி மாலை 4மணிக்கு மேல் கடற்கரையில் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள். 19-ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
பழநி முருகன் கோயில்: பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று தண்டாயுதபாணி சுவாமிக்கு உச்சிக்கால பூஜை செய்யப்பட்டு, காப்புக்கட்டுதல் நடைபெற்றது. பின்னர் உற்சவர், விநாயகர், நவ வீரர்கள், துவார பாலகர்களுக்கு காப்புக் கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் கைகளில் காப்புக்கட்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினர்.
காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது.