புதுடெல்லி: சிறைக் கைதிகள் பரோலில் விடுவிக்கப்படும்போது அவர்களை கண்காணிக்கும் வகையில் ஜிபிஎஸ் கருவி போன்றவற்றை பொருத்தும் நடைமுறையை மாநிலங்கள் பின்பற்றலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தனது பரிந்துரையில், “கடும் குற்றம் செய்த குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகளிடம் இருந்து பிரிக்கவும் இந்த நடைமுறை பயன்படும். தற்காலிக விடுதலை அல்லது பரோல் விடுப்பில் உள்ள கைதிகளை கண்காணிக்கும் வகையில் அவர்கள் மீது மின்னணு கருவிகளை பயன்படுத்தலாம். அதேபோல் கைதிகள், தங்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் இத்தகைய கருவியை அணியை விருப்பம் தெரிவித்தால் சிறையில் இருந்து அவர்களுக்கு விடுப்பு அளிக்கலாம். வெளியில் சென்ற பிறகு விதியை மீறி, கருவியை அகற்றினால் எதிர்காலத்தில் வழங்கப்படும் எந்தவொரு சிறை விடுமுறையையும் அக்கைதியை தகுதி நீக்கம் செய்யலாம்” என்று தெரிவித்துள்ளது.
சிறைத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்பு குழு கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி மத்திய உள்துறையிடம் விரிவான அறிக்கை சமர்ப்பித்தது. அதில் ஜாமீனில் விடுதலையாகும் கைதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நடைமுறையை காஷ்மீர் போலீஸார் உடனடியாக அமல் செய்தனர். கடந்த வாரம், ஜாமீனில் விடுதலையாகும் தீவிரவாதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறையை காஷ்மீர் போலீஸார் தொடங்கினர்.
காஷ்மீரில் செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் குலாம் முகமது. தீவிரவாதிகளுக்கு நிதி,ஆயுத உதவிகளை வழங்கியது தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல ஆண்டுகள் சிறையில் இருந்த அவருக்கு ஜம்முவில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது. இம்மாதம் 4-ம் தேதி அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவரது காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது.
அப்போது “அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஜாமீனில் விடுதலையாகும் கைதிகளின் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுகிறது. இதே நடைமுறை இந்தியாவில் முதல்முறையாக காஷ்மீரில் தொடங்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய குலாம் முகமதுவின் காலில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி உள்ளோம். இதன்மூலம் அவரது நகர்வுகளை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். புதிய திட்டத்தால் ஜாமீனில் விடுதலையாகும் தீவிரவாதிகள் தலைமறைவாவது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது தடுக்கப்படும்” என்று காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர்.