ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க பாஜக, பாரத் ராஷ்ட்ர சமிதி, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை ஒன்று சேர்ந்துள்ளன என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தெலங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியது: “தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டுமானால், ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி மட்டுமின்றி, அதன் கூட்டணியில் உள்ள பாஜக, ஏஐஎம்ஐஎம் ஆகியவற்றையும் தோற்கடிக்க வேண்டும். ஏனெனில், தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி வெற்றி பெற வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. பாஜக – பாரத் ராஷ்டிர சமிதி – ஏஐஎம்ஐஎம் ஆகிய 3 கட்சிகளும் மறைமுக கூட்டணியை அமைத்து காங்கிரஸை எதிர்க்கின்றன.
பாஜகவை எதிர்ப்பவர்கள் ஒருவேளை பாரத் ராஷ்டிர சமிதிக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கே சாதகமாக அமையும். ஏனெனில், பாரத் ராஷ்டிர சமிதியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர ராவை இயக்கும் ரிமோட் கன்ட்ரோல், பிரதமர் மோடியிடம் இருக்கிறது. எனவே, தெலங்கானாவில் பாஜகவை தோற்டிக்க வேண்டும். அதோடு, அதனுடன் மறைமுகக் கூட்டணியில் உள்ள பாரத் ராஷ்ட்ர சமிதி, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி பேசினார்.
தெலங்கானா தேர்தல்: தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் கட்சியான பிஆர்எஸ், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகிய 3 கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் நவம்பர் 3-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்ளை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் நாளை (நவம்பர் 13-ம் தேதி) பரிசீலிக்கப்படுகின்றன. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 15. தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடக்கிறது.
தெலங்கானா மாநிலம் உருவானது முதல் தொடர்ந்து 2 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரசேகர ராவ், 3-வது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என அவர் உறுதியாக கூறி வருவது கவனிக்கத்தக்கது.