இந்த எபிசோடில் நிகழ்ந்த தீபாவளிக் கொண்டாட்டம் காரணமாக, கடந்த வாரம் முழுவதும் பெருகி ஓடிய கசப்புணர்ச்சி சற்று தணிந்து ஜாலியான மனநிலைக்கு மாறியது வீடு.

பிக் பாஸ் கூட இறங்கி வந்து ரெண்டு மூன்று ஜோக் அடித்தார். இரண்டு வீடுகளையும் தடுத்த பிரிவினைக் கோடு அழிக்கப்பட்டு வீடுகள் ஒன்றாக்கப்பட்டது ஒரு நல்ல ட்விஸ்ட். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மாயாவின் பெயர் வராதது குறித்து பிக் பாஸே ஆச்சரியப்பட்டிருப்பார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

தீபாவளி பண்டிக்கைக்கான கொண்டாட்டத் தொனி வீடெங்கிலும் செய்யப்பட்ட அலங்காரங்களில் தென்பட்டது. ‘மருத.. மருத.. குலுங்க.. குலுங்க’ என்று காலையில் ஒலித்த பாடலுக்கு வீடு குலுங்க மக்கள் ஆடினார்கள்.

போட்டியாளர்களை சபையில் ஒன்று திரட்டிய பிக் பாஸ், தீபாவளி வாழ்த்துகளைச் சொல்லி விட்டு ஒரு நல்ல தகவலையும் சொன்னது இந்த சீசனின் சிறந்த ட்விஸ்ட். ஆம், இனி பிக் பாஸ் வீடு, ஸ்மால் பிக் பாஸ் வீடு என்கிற பிரிவினை கிடையாது. ‘கோதவரி. வீட்டுக்கு நடுவுல கோடு ஒண்ணு கிழிடி’ என்று முதலில் கூப்பாடு போட்ட அம்மையப்ப முதலியார் இப்போது மனம் மாறி விட்டார். எனவே விம் லிக்விட் கொண்டு கோடு அழிக்கப்பட்டது.

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

இதுவொரு நல்ல மாற்றம். ஏழாவது சீசனில் புதியதாக ஏதாவதொரு அம்சத்தை இணைக்க வேண்டும் என்று கொண்டு வந்தார்கள் போல. அது ஏழரையாக மாறியது. இதனால் சண்டை, சச்சரவு எல்லாம் ஜகஜோதியாக வந்து பிக் பாஸ் நன்றாக கல்லா கட்டினார்தான். ஆனால் பெரிய வீடு முதலாளி போலவும், சின்ன வீட்டில் உள்ளவர்கள் பணியாளர்கள் போலவுமான ஒரு சமநிலையின்மைத் தோற்றம் வந்து விட்டது. மேலும் சின்ன வீட்டிற்கு அனுப்பப்படுகிறவர்கள், கேப்டனாக இருப்பவரின் இஷ்டத்திற்குத் தேர்வு செய்யலாம் என்கிற சர்வாதிகார விதியும் ரசிக்கும்படியாக இல்லை. இந்த மாற்றத்தைப் போட்டியாளர்களும் கைத்தட்டி மகிழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தினார்கள்.

இந்த மாற்றம் இந்த கட்டுரைத் தொடருக்கும் நல்லதுதான். சின்ன வீடு, சின்ன வீடு என்று நான் சுருக்கமாக எழுதும் போதெல்லாம் அது தவறாக புரிந்து கொள்ளப்படக்கூடாதே என்கிற கவலை இனி கிடையாது.

அழிக்கப்பட்ட பிரிவினைக் கோடு

சின்ன வீடு இனி கிடையாது என்பதால் அந்த வீட்டின் பிக் பாஸூம் இனி கிடையாது. விடைபெற்றுக் கொள்வதற்காக அவர் வந்த போது பிரிவுச் சோகத்தில் பெருமூச்சு விட்ட விசித்ரா, கண்ணைச் சிமிட்டி சிமிட்டி ‘உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்’ என்று சொல்ல ‘விச்சு’ என்று செல்லமாக ழைத்து பாசத்தைப் பொழிந்தார் அந்த ஆசாமி. அப்படி அழைக்கப்பட்டதால் வீடே குலுங்குபடியாக ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார் விசித்ரா. இது பெரிய பிக் பாஸிற்கு பொசசிவ் உணர்வை ஏற்படுத்தியதோ என்னமோ, ‘இந்தாளு ரொம்ப பேசறான்’ என்று சொல்லி அவருக்கு பொட்டி கட்டி டிக்கெட் வாங்கி ஊருக்கு அனுப்பி வைத்தார். ஸ்மால் பிக் பாஸின் குரல் இந்த சீசனில் எந்தவொரு இம்பாக்ட்டையும் ஏற்படுத்தவில்லை. என்ன இருந்தாலும் பெரிய பாஸ்தான் கெத்து!

உணவு பண்டங்கள்

கூடவே இன்னொரு மகிழ்ச்சியான தகவலையும் தெரிவித்தார் பிக் பாஸ். ‘டீ. காஃபி தவிர, இன்னிக்கு முழுக்க உணவு என்னோட ட்ரீட்” என்று அறிவிக்க மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். ஆனால் பாஸ் வெவரம்தேன்! அதற்குப் பிறகு வந்த உணவு போட்டியாளர்களின் வீடுகளில் இருந்து வந்தன. இரவு உணவும் ஸ்பான்சர்களுடையது. ஆக மனிதர் பாக்கெட்டில் இருந்து ஒரு பைசாவையும் எடுக்கவில்லை.

பழையபடியாக கிச்சன் டீம், வெஸல் வாஷிங் டீம், பாத்ரூம் க்ளீனிங் டீம், ஹவுஸ்கீப்பீங் டீம் என்று நான்கு அணிகள் பிரிக்கப்பட்டன. பாத்திரம் கழுவும் அணியில் மாயாவையும் பூர்ணிமாவையும் இணை பிரியாமல் ஒன்றாக அனுப்பி வைத்தார் கேப்டன் தினேஷ். புதுத்துணி, எண்ணைய், சீயக்கா என்று சகல தீபாவளி சொகுசுகளும் வந்தன. மாமனார் வீட்டுக்கு வந்த புது மாப்பிள்ளை போல மக்கள் அனைத்தையும் அனுபவித்தனர்.

ஊருக்கே கொண்டாட்டம், இருவருக்கு திண்டாட்டம்

ஒட்டுமொத்த வீடே பண்டிகைக் கொண்டாட்டத்தில் இருந்தாலும், இரண்டு பரிதாப ஜீவன்கள் மட்டும் தங்களுக்குள் அனத்திக் கொண்டு ஓரமாக அமர்ந்திருந்தன. அது மாயா மற்றும் பூர்ணிமா. கடந்த வாரத்தில் இவர்களின் அட்டகாசம்தான் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த வாரத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் போல முகத்தில் சுரத்தே இல்லாமல் உலவிக் கொண்டிருந்தார்கள். ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறி ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ என்ற விஜய்ண்ணாவின் தத்துவம் மறுபடியும் நிருபணம் ஆனது.

‘என்னால இவங்க விரும்பற படி எப்படி வேணுமின்னாலும் விளையாட முடியும். அந்தத் திறமை எல்லாமே என் கிட்ட இருக்கு’ என்று தன்னை ஒரு சகலகலாவல்லியாக நினைத்து பேசிக் கொண்டிருந்தார் பூர்ணிமா. ஓகே. திறமையான பெண்தான். எனில் இந்த ஆட்டத்திற்குப் பொருத்தமான வியூகங்களையல்லவா பொருத்தி ஆட வேண்டும். செய்கிற அழிச்சாட்டியங்களையெல்லாம் மாயாவுடன் இணைந்து செய்து விட்டு ‘என்னைத் தப்பா காண்பிக்கறாங்களோ?’ என்று அனத்துவதில் லாபமென்ன?!

மாயா, பூர்ணிமா

“ரூல் பிரேக் செஞ்ச விசித்ராவிற்கு திட்டு விழும்ன்னு நெனச்சேன். ஆனா தலைகீழா நடந்தது. நீங்க இறங்கி போய் டூத் பிரஷ்லாம் கொடுத்துட்டு வந்தீங்க.. அப்ப கூட அவங்க ஸாரி கேட்கலை. ஆனா அவங்களுக்குப் பாராட்டு கிடைக்குது” என்றெல்லாம் அனத்திய பூர்ணிமா, கமலின் விசாரணையே கேள்விக்குள்ளாக்கினார். அதற்காக அவர் சொன்ன ஒரு உதாரணம்தான் புல்லரிக்க வைத்தது. “இப்ப நான் கைய வெச்ச உன் முட்டில அடிக்கறன்னு வெச்சுக்கயேன். முட்டி வந்து அடிச்சதுன்னா சொல்லுவோம்?” என்றெல்லாம் தத்துவமாக உதிர்த்துக் கொண்டிருந்தார். டூஷ் பிரஷ் என்கிற அடிப்படையான பொருட்களைக் கூட தராமல் போங்காட்டம் ஆடியதை பூர்ணிமா எப்படி நியாயம் என்று இன்னமும் கருதிக் கொண்டிருக்கிறார்?! ‘இந்த ஆட்டமே எனக்குப் புரியல’ என்று கலங்கிய பூர்ணிமாவை கட்டியணைத்து ஆறுதல் சொன்னார் மாயா.

“நிக்சன் கஷ்டப்படப் போறான். அது காதலா இல்ல கேமான்னு தெரியல” என்று சுரேஷ் சொல்ல, “அதெல்லாம் காதலே இல்ல. ஒரே மாசத்துல அதெல்லாம் வராது. பிராக்டிகல்லி இம்பாஸிபிள்’ என்று யதார்த்தமான காரணத்தைச் சுட்டிக் காட்டினார் தினேஷ்.

காசே செலவு செய்யாமல் பிக் பாஸ் தந்த தீபாவளி ட்ரீட்

தீபாவளி ஸ்பெஷல் டாஸ்க்கில் ஜெயித்தால், அவரவர்களின் வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வரப்பட்ட உணவை சாப்பிடலாம் என்று ஆசை காட்டினார் பிக் பாஸ். சிறப்பு விருந்தினர்களாக புகழும் ஸ்ருஷ்டியும் உள்ளே வந்தார்கள். ‘எங்கே ஒளிவது?’ என்று தெரியாமல் தடுமாறினார் ஸ்ருஷ்டி. சிறு வயதில் ஐஸ்பாய் ஆட்டமெல்லாம் அவர் ஆடியதில்லை போல. (அதற்குப் பெயர் ‘I Spy’ என்பதாம். ஏழு கழுதை வயது முடிந்தபிறகுதான் இந்த உண்மை தெரிகிறது!)

விளக்கு ஏற்றும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் போராடி மூச்சு வாங்கி தோற்றார்கள். “தீபாவளிதான். பண்டிகைதான்.. இல்லைங்கல.. இருந்தாலும் டாஸ்க்கு டாஸ்குதானே.. எப்படி உங்களுக்குப் பரிசு கொடுக்கறது” என்று பாவனையாக கெத்து காட்டிய பிக் பாஸ், பிறகு ‘சரி.. போய்க் கொட்டிக்கங்க’ என்று சிறப்புச் சலுகையைக் காட்டினார்.

ஸ்ருஷ்டி டாங்கே

‘இந்த புலிப்பாண்டி கொடூரமானவன்தான். ஆனா குழந்தைகளுக்கு இல்ல’ மோமெண்ட். வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவுகளை திருப்பியா அனுப்ப முடியும்?! அவரவர் வீடுகளில் இருந்து விதம் விதமாக வந்த அனைத்து உணவுகளையும் மக்கள் உரிமையுடன் பகிர்ந்துண்ட காட்சி சிறப்பானது.

வீடே உற்சாகமாக இருந்தாலும் மாயாவும் பூர்ணிமாவும் மட்டும் மந்திரித்து விட்ட கோழிகள் மாதிரியே தனியாக உலவிக் கொண்டிருந்தார்கள். மாயாவிடம் வாயைக் கொடுத்த ஸ்ருஷ்டி, வாங்கின அடியில், ‘you are very tough nut to crack’ என்று பின்வாங்கினார். “என்னது கிராக்கா?” என்று காமெடி செய்தார் புகழ். Bully Gang என்று வார்த்தையை விட்டு விட்ட ஸ்ருஷ்டி, மாயாவின் கண்களைப் பார்த்ததும் ‘Okay.. i take it back’ என்று ரிவர்ஸ் கியர் போட்டார். இன்னமும் சற்று நேரம் வீட்டில் நீடித்திருந்தால் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் வந்திருப்பார் ஸ்ருஷ்டி.

பிக் பாஸ் பற்ற வைத்த ஸ்பெஷல் பட்டாசுகள்

தீபாவளி நாள் என்றாலும் மக்களிடையே கொளுத்திப் போட்டு பற்ற வைக்கும் விளையாட்டை பிக் பாஸ் நிறுத்தவில்லை. ஒரு டப்பாவில் இருக்கும் பட்டாசை தற்செயல் தேர்வில் எடுக்க வேண்டும். அந்தப் பட்டாசிற்கான விவரம் யாருக்குப் பொருத்தம் என்று தேர்வு செய்து அதற்கான காரணங்களையும் சொல்ல வேண்டும். சற்று நக்கலும் நையாண்டியும் இருந்தாலும் பொருத்தமான காரணங்களையும் நபர்களையும் தேர்ந்தெடுத்து மக்கள் அசத்தினார்கள். ‘பென்சில் வெடி.. இது எதுக்கு இருக்குன்னே தெரியாது’ என்பதற்கு பிராவோ தேர்ந்தெடுக்கப்பட்டார். கவனிப்பன்றி இருக்கும் சாட்டைவெடியாக விக்ரம். ஆட்டம் பாம் பூர்ணிமா மற்றும் மாயாவாம். ராக்கெட் ஜோவிகாவிற்கு கிடைத்தது. அதுவாக போனால் சரியாக மேலே போய் விடுமாம். யாராவது சாய்த்து நிறுத்தி விட்டால் குறுக்கே நெடுக்கே பாய்ந்து கோளாறு செய்யுமாம். இதை பெருமிதப் புன்னகையுடன் வாங்கிக் கொண்டார் ஜோவிகா.

அக்ஷயா, விக்ரம், ஜோவிகா

இந்த பட்டாசு டாஸ்க் நடந்த போது விக்ரம் பெயரை பிக் பாஸ் அழுத்திக் கூப்பிட்டவுடன் அவர் ஜெர்க் ஆனார். “போயி மெயின் டோர் கதவை மூடிட்டு வாங்க” என்று பிக் பாஸ் சொன்னவுடன் சங்கடத்துடன் எழுந்து சென்றார். அவர் கடைசியாக வந்த போது கதவை மூட மறந்திருக்கலாம். ‘இதுக்குத்தான் நீ யூஸ் ஆவேன்னு பிக் பாஸிற்கு கூட தெரிஞ்சிருக்கு” என்று கிண்டலடித்தார் சுரேஷ். என்னதான் பிக் பாஸ் ஜாலியாக சொல்லியிருந்தாலும் இதுவும் ஒருவகையான Bullying தான். பிக் பாஸ் அதைச் செய்யக்கூடாது.

பட்டாசுகள் வந்தன. ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்கிற டெம்ப்ளேட் பாடலைப் பாடி மக்கள் பட்டாசு ஏற்றி கொண்டாடினார்கள். இன்று ஒருநாள் மட்டும்தான் இந்தப் பாட்டு செல்லுபடியாகும். மறுநாளில் இருந்து வழக்கம் போல் சண்டையில் மண்டை உடையப் போகிறது. “நாம அவங்கள கண்டுக்கவே கூடாது. நாம ஏத்தி விடறதாலதான் அவங்களுக்குப் பேரு வருது” என்று மூலையில் ஒதுங்கி மாயாவுடன் தனியாக புறணி பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார் பூர்ணிமா.

வெளியே அனுப்பப்படும் மிக்சர் பார்ட்டிகள்?

‘சிவனாய் இருந்தால் என்ன, எவனாய் இருந்தால் என்ன?’ என்கிற மோடில் இருக்கும் பிக் பாஸ், தீபாவளியென்றாலும் என்ன என்று நாமினேஷன் பிராசஸை ஆரம்பித்தார். வீட்டில் இருக்கும் மிக்சர் பார்ட்டிகளை வெளியே அனுப்பலாம் என்று ஒருமனதாக தீர்மானித்து விட்டார்கள் போலிருக்கிறது. எனவே விக்ரம், அக்ஷயா, பிராவோ, பாலா, மணி, ரவீனா போன்றவர்களின் பெயர்கள் நிறைய வந்தன. விக்ரம் மற்றும் அக்ஷயாவின் பெயர்கள் சொல்லப்படும் போது அவர்கள் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பது, கண்களை மூடி சாய்ந்திருப்பது போன்ற காட்சிகளை இணைத்து அநியாய குறும்பு செய்தது பிக் பாஸ் டீம்.

“மாயா கேப்டன்ஸில செஞ்ச தப்பையெல்லாம் பூர்ணிமா தட்டிக் கேட்கவில்லை. அப்படின்னா அவங்களை தவறு செய்ய வெச்சு வெளியே அனுப்பறதுதான் பூர்ணிமாவோட பிளானா இருக்கும்ன்னு சந்தேகப்படறேன்” என்று அமெரிக்க சதி ரேஞ்சிற்கு நாமினேஷன் காரணம் சொன்னார் அர்ச்சனா. வீட்டிற்குள் வந்த புதிதில் ‘மூசுமூசு’வென்று அழுது கொண்டிருந்த அர்ச்சனாவா இவர்?! இனி மற்றவர்களை அழ வைத்து விடுவார் போலிருக்கிறது. ‘விக்ரம் எடுபிடி வேலைகளைச் செய்துக்கிட்டு இங்க பிழைச்சிட்டிருக்கான்’ என்று மளிகைக்கடைப் பையன் போல ஹாண்டில் செய்து விக்ரமிற்கான காரணத்தைச் சொன்னார் விசித்ரா.

ஸ்ருஷ்டி, அக்ஷயா

ஆக இந்த வாரத்தில் நாமினேட் ஆனவர்கள் இவர்கள்தான். அடைப்புக்குறிக்குள் இருப்பது அவர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை. பாலா (2), விக்ரம் (6), அக்ஷயா (3), மணி (5), ரவீனா (2), பிராவோ (3), விசித்ரா (3) மற்றும் பூர்ணிமா (3). இந்த பிராசஸ் முடிந்ததும் ‘வாட்.. என் பேர் வரலையா?” என்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார் மாயா. பார்வையாளர்களுக்கும் அது ஆச்சரியமாகத்தான் இருக்கும். மாயாவை நன்றாக கவனித்து விட்டு பிறகு வெளியே அனுப்பலாம் என்கிற பிளானில் மற்றவர்கள் இருக்கிறார்களோ, என்னமோ.

விளம்பரதாரர் ஸ்பான்சர் செய்த உணவு வகைகளின் மெனுக்களை பட்டியல் போட்டு சொல்லி வாயூர வைத்து காண்டாக்கினார் தினேஷ். செஞ்சோற்றுக்கடன் தீர்க்க, ஸ்பான்சரின் பெயரை வைத்து பாலா ஒரு பாட்டைப் பாடியதோடு எபிசோட் நிறைவடைந்தது.

முடிந்தது தீபாவளிக் கொண்டாட்டம். ஆனால் இனிதான் பட்டாசுகள் அதிக அளவில் வெடிக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: