சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக வரும் 15-ம் தேதி வரை3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக போக்குவரத்து கழகங்கள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற நகரங்களில் வசிக்கும் மக்கள், பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வதற்காக போக்குவரத்துகழகங்கள் சார்பில் கடந்த 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதன்படி, சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 1,415 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்தவகையில், 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 3 நாட்கள் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதில் 4.5 லட்சம் பேர் பயணம் செய்தனர். அதேபோல, ஆம்னி பேருந்துகளில் 1.50 லட்சம் பேர்பயணம் செய்திருந்தனர். இதன்மூலம் தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
9,467 பேருந்துகள் இயக்கம்: இந்நிலையில், சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் ஊர் திரும்ப வசதியாக போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றுமுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னைக்கு நாள்தோறும் இயக்கக்கூடிய 2,100 அரசு பேருந்துகளுடன் 3,167 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு 9,467 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல, பிற ஊர்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் வழக்கமான பேருந்துகளுடன் 3,285 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நவ.13 முதல் 15-ம் தேதி வரை3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்இயக்கப்படுகின்றன.
தீபாவளி விடுமுறை முடிந்து, பணிக்கு செல்பவர்கள் நேற்று ஊர் திரும்பினர். சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும் நேற்று காலை முதலே சென்னைக்கு திரும்ப தொடங்கினர்.
வெளியூர்களில் இருந்து புறப்பட்டு சென்னை வரும் பேருந்துகள் நெரிசலில் சிக்காமல் இருக்க, போக்குவரத்து காவல் துறையும், போக்குவரத்து கழகங்களும் சேர்ந்து பல்வேறு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக, சென்னையின் நுழைவுவாயில் பகுதிகளான பெருங்களத்தூர், தாம்பரம், மதுரவாயல், கோயம்பேட்டில் அதிக அளவில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளியையொட்டி, ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
ரூ.18.77 லட்சம் அபராதம்: அந்த வகையில், தமிழகம் முழுவதும் 6,699 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில், அதிக கட்டண வசூல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் 1,223 ஆம்னி பேருந்துகள் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பேருந்துகளுக்கு ரூ.18.77 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ.10.70 லட்சம் வசூல் செய்யப்பட்டது. 8 ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டன. முறையாக வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகளிடம் இருந்து ரூ.11.25லட்சம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. பல பேருந்துகளுக்கு ரூ.3.10 லட்சம் வரி விதிக்கப்பட்டது.
சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவதால், ஆம்னி பேருந்துகளில் தொடர்ந்து சோதனை நடைபெறும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.