
தஞ்சாவூர்: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறுவன் தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் சுவரேறி குதித்து தப்பிச் சென்றுள்ளான்.
இங்கிருந்து தப்பியோடிய அச்சிறுவன் கபிஸ்தலம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளான். போலீஸார் தன்னைத் தேடி வீட்டிற்கு வருவதை அறிந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். தப்பிச் சென்ற சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர். தப்பியோடிய சிறுவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். இச்சிறுவன் உள்பட மொத்தம் 2 நபர்களே கூர்நோக்கு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மற்றொரு சிறுவன் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சுவரேறி குதித்து ஊட்டிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது மேட்டுப்பாளையம் செக் போஸ்டில் பேருந்தை மறித்து பிடித்து தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டான். பின்பு அவனுக்கு பிணை அளிக்கப்பட்டது.
பிணை முடிந்து சிறுவன் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மீண்டும் கூர்நோக்கு இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு தங்கவைக்கப்பட்டான்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இன்னொரு மாணவன் சுவரேறி குதித்து தப்பிச் சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | பசுஞ்சாணத்தால் உருவாக்கப்பட்ட 3 லட்சம் தீப விளக்குகள்!
தமிழகத்தில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லங்களில் இருந்து சிறுவர்கள் அடிக்கடி தப்பிச் செல்வதற்கான காரணங்களைக் கண்டறிய தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் கே. சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தஞ்சாவூரில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அக்டோபர் 4-ஆம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளது.
இந்த நிலையில் மேலும் ஒரு சிறுவன் தீபாவளி நாளில் தப்பிச் சென்றுள்ள சம்பவம் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…