நடப்பு உலகக்கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக ஆடி அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில், ஆஃப்கன் அணியின் வீரர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஃப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் அகமதாபாத்தின் பிளாட்ஃபார்ம்களில் உறங்கிக் கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு பண உதவி செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் வைத்தே எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி போராடி வீழ்ந்தது. அத்தோடு அந்த அணியின் உலகக்கோப்பை பயணமும் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில்தான் தங்களின் சொந்த ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பாக தீபாவளிக்கு முந்தைய நாளின் அதிகாலை 3 மணிக்கு குர்பாஸ் மட்டும் தனியாக இந்த உதவியைச் செய்திருக்கிறார். அகமதாபாத்தின் வீதிகளில் சுற்றிய குர்பாஸ் நடைபாதைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் ஏழை எளியோரின் அருகே கொஞ்சம் பணத்தை வைத்துவிட்டு சத்தமே இல்லாமல் அப்படியே மெதுவாக நகர்ந்து செல்கிறார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பல தரப்பினரும் குர்பாஸை உச்சி முகர்ந்து பாராட்டி வருகின்றனர்.
குர்பாஸ் மட்டுமில்லை. நடப்பு உலகக்கோப்பையில் ஒட்டுமொத்த ஆஃப்கானிஸ்தான் அணியும் மனிதநேயத்தையும் ஒரு ஆயுதமாக ஏந்தியே போட்டிகளில் பங்கேற்றிருந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி ஒவ்வொரு போட்டியை வெல்லும்போதும் அது மக்களுக்கான வெற்றி என்பதை அழுத்தமாகக் கூறிக்கொண்டே இருந்தனர். ஆஃப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சில வெற்றிகளை அர்ப்பணித்தனர். சில வெற்றிகளை ஆஃப்கானிஸ்தானிய அகதிகளுக்காக அர்ப்பணித்தனர்.

எங்கள் மக்கள் பெரும் இன்னல்களில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களுக்கான சிறு மகிழ்ச்சியாக எங்களின் இந்த வெற்றிகள் அமையும் என ஆஃப்கானிஸ்தானின் அத்தனை வீரர்களும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உருக்கமாக பேசியிருந்தனர். மேலும், ஒவ்வொரு போட்டியின் போதும் இந்திய ரசிகர்கள் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கொடுத்த வரவேற்பிற்கும் உணர்வுப்பூர்வமாக நன்றி தெரிவித்திருக்கின்றனர். ஆக, மக்களுக்காக யோசித்தல் என்பது இந்த ஆஃப்கானிஸ்தான் அணியின் அடிப்படை எண்ணமாக இருந்திருக்கிறது. அதன் நீட்சிதான் குர்பாஸ் அகமதாபாத் மக்களுக்கு மனமார உதவிய சம்பவம். இதற்கு முன்னர் ஆஃப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நிதியுதவி திரட்டும் வேலைகளிலும் குர்பாஸ் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குர்பாஸின் செயலைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.