புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்த சொலாரா மாத்திரை தொழிற்சாலை விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் மரணமடைந்தார். இதையடுத்து, பூட்டிய ஆட்சியர் அலுவலகம் முன்பு நீதி கேட்டு கைக்குழந்தையுடன் மனைவி கதறி அழுதார். தொழிற்சாலையை மூட வேண்டும், உரிய நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உடலை வாங்க மாட்டோம் என்று இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு பகுதியில் சாசன் என்ற பெயரில் இயங்கிய மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை சில ஆண்டுகளுக்கு முன் சொலாரா ஆக்டிவ் பார்மா என்ற பெயரில் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த 4-ம்தேதி இரவு பாய்லர் வெடித்து 16 ஊழியர்கள் உள்பட 6 நபர்கள் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து அவசர அவசரமாக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வைக் கண்டித்து 5-ம் தேதி தொழிற்சாலை சுற்றியுள்ள சின்னக் காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், பிள்ளைச்சாவடி, ஆகிய நான்கு மீனவ கிராமங்களில் சார்ந்த மீனவ பஞ்சாயத்தார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது அவர்கள் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் இங்கு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. குடிநீர் அசுத்த நிலையை அடைந்து குடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் அரசிடம் வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, விபத்து ஏற்பட்டு தற்போது 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிறுவனத்தை முழுமையாக இழுத்து மூடி பூட்டு போட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம்” என்று மீனவ பஞ்சாயத்தார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நிர்வாகத்தைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் இறங்கிய மீனவர்களை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் காலாப்பட்டு தொழிற்சாலை சுற்றியுள்ள பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் மாவட்டம் கிளியனூரை அடுத்த தென் சிறுவலூரை சேர்ந்த நெடுஞ்செழியன் (34) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அப்போலோ மருத்துவமனையில் 12 நாட்களாக சிகிச்சையில் இருந்த நெடுஞ்செழியன் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் அனுமதியின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனைக்கு அவரது சடலத்தை கொண்டு வந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டி புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர்.

அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததால், இதனை அறிந்த பாதுகாவலர்கள் வாயிற் கதவை இழுத்து மூடினர். அப்பொழுது நெடுஞ்செழியன் மனைவி கார்த்திகா இரண்டு மாத கைக்குழந்தையுடன் கேட்டின் முன்பு அமர்ந்து கதறி அழுதார். அவருடன் பெற்றோர் கோதண்டபாணி, சாந்தா, மச்சான் குருநாத் ஆகியோரும் இருந்தனர். அவர்கள் உறவினர்கள் கூறுகையில், “தொழிற்சாலை விபத்து அடைந்த உடனே ஜிப்மர் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்தனர். ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லை என்று சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றினார். அப்போலோ மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இவர்களுடைய தவறுகளை மறைப்பதற்காகவே அப்பல்லோ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

நெடுஞ்செழியன் இறந்தது குறித்து எங்களுக்கு தகவலை கொடுக்கவில்லை, காவல் துறைக்கு மட்டும் தகவல் கொடுக்கப்பட்டு எங்களின் அனுமதி இல்லாமல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து இந்திராகாந்தி மருத்துவமனைக்கு சடலத்தை கொண்டு வந்துள்ளனர். காவல் துறையினர் விபத்து குறித்து எந்த தகவலும் தங்களிடம் கூறவில்லை. தொழிற்சாலை நிர்வாகம் அனைத்துமே மறைக்கப் பார்க்கின்றனர். பணம் இங்கே விளையாடிக் கொண்டிருக்கிறது. உண்மைகள் அனைத்தும் எப்பொழுது எப்படி வெளியே வரும் என தெரியவில்லை. எங்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும். தொழிற்சாலை உரிமையாளரை கைது செய்ய வேண்டும். நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்” என்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: