ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புள்ளப்ப நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கீர்த்திவேல் துரை (28). அங்காளம்மன் கோயில் பூசாரி. இவரது நண்பர்களான ஏளூரைச் சேர்ந்த மயிலானந்தன் (30), சதுமுகையைச் சேர்ந்த பூவரசன் (24), ராகவன் (26) ஆகியோர், சத்தியமங்கலம் – கோவை சாலையில் நேற்று நள்ளிரவில் காரில் பயணித்துள்ளனர். காரினை பங்களாபுதூரைச் சேர்ந்த இளையராஜா (33) ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்த சாலையில் உள்ள சின்னானூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கீர்த்திவேல் துரை, மயிலானந்தன், பூவரசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ராகவன், சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழ்ந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த கார் ஓட்டுநர் இளையராஜா, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்து குறித்து போலீஸார் கூறும்போது, ‘விபத்தில் உயிரிழந்த கீர்த்திவேல் துரைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், நண்பர்கள் ஒன்றிணைந்து பத்திரிக்கை கொடுக்க காரில் பயணித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களில், மயிலானந்தன் பனியன் நிறுவன தொழிலாளியாகவும், பூவரசன் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றிலும், ராகவன் ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: