ராய்ப்பூர்: “பிரதமர் மோடி தேர்ந்தெடுத்து நடவடிக்கை எடுக்காமல் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் ராமன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மாநில காங்கிரஸ் அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, ‘கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பிரதமர் மோடி கூறியதற்கு சத்தீஸ்கர் முதல்வர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
சத்தீஸ்கரில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் பூபேஷ், “பிரதமர் மோடி முதலில் ராமன் சிங் மீது நடவடிக்கை எடுக்கட்டும். பின்னர் மோடி வாஷிங்பவுடரால் சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாக்கப்பட்டுள்ள ஹேமந்த பிஸ்வா சர்மா, அஜித் பவார் மீதும் நடவடிக்கை எடுக்கட்டும். குறிப்பிட்ட சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் பதவிக்கு இரண்டரை ஆண்டு காலம் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், முதல் இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் நிறைய கொள்ளையடித்து, ஊழல் செய்து பணத்தைக் குவித்துவைத்துள்ளார். ஊடக நண்பர்களில் சிலர் என்னிடம் முதல்வர் பூபேஷ் பாகலே தோற்கலாம் என்று கூறினர். சத்தீஸ்கரில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு சத்தீஸ்கரில் அதன் ஆட்சிக் காலம் முடிந்துவிட்டது என்பது தெரிந்துவிட்டது. காங்கிரஸின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சத்தீஸ்கர் மக்களுக்கு இனியும் காங்கிரஸ் தேவையில்லை.
கணக்கு கற்பிக்க விரும்பும் காங்கிரஸ் தலைவர்களிடம் கட்சியைப் பற்றி சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். மகாதேவ் பந்தய செயலி மூலமாக ரூ.508 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. விசாரணை நிறுவனங்கள் இந்த வழக்கில் அதிமான அளவு பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநில முதல்வரின் நெருங்கிய உதவியாளர் இந்த வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளார். இதில் முதல்வர் எவ்வளவு பணம் பெற்றார், மற்றத் தலைவர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது, டெல்லிக்கு எவ்வளவு பணம் சென்றது என்பதை காங்கிரஸ் கட்சி விளக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிவருகின்றன. மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு நவ.7-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் 17-ம் தேதி இரண்டாவது கட்டமாக மீதமுள்ள தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிச.3-ம் தேதி நடைபெறும்.