சிசிடிவி கேமராவில் உருவாகும் படம்
13 நவ, 2023 – 11:53 IST
சினிமாவில் அவ்வப்போது பரிசோதனை முயற்சிகள் நடக்கும். ஒரே ஷாட்டில் உருவாகும் படம், ஒருவர் மட்டுமே நடிக்கும் படம், வசனம் இல்லாத படம் இப்படி ஏராளமான சாதனை படங்கள் வந்திருகின்றன. கடைசியாக செல்போனில் தயாரான படம் கூட வந்திருக்கிறது. இந்த நிலையில் கன்னட நடிகர் உபேந்தராவின் மனைவி பிரியங்கா சிசிடிவி கேமரா மூலம் உருவாகும் ‘கேப்ச்சர்’ என்ற படத்தை தயாரித்து, நடிக்கிறார்.
அலுவலகங்கள், சாலைகள், வீடுகளில் கண்காணிப்பு கேமரா தற்போது பொருத்தப்படுகிறது. இந்த கேமராவில் பதிவான காட்சிகளை திரைக்கதையாக்கி இந்த படம் தயாராகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் உலகிலேயே ஒரே லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட படமும் இதுதான் என்கிறார்கள்.
லோஹித்.ஹெச் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் மம்மி மற்றும் தேவகி ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரியங்காவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்ஷன்ஸ் சார்பில் ரவி ராஜ், ஷாமிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப்படம் முழுவதும் கோவாவில் 30 நாட்களில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகும் விதமாக தயாராகி வருகிறது. சிவராஜ்குமாரின் ‘டகரு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற மன்விதா காமத், மாஸ்டர் கிருஷ்ணராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். பாண்டிக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
+ There are no comments
Add yours