புதுடெல்லி: உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

உத்தராகண்டில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தங்கள் கட்சி வெற்றி பெற்றால் பொது சிவில் சட்டம் இயற்றப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது. அந்தத் தேர்தலில் பாஜக 2-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இதையடுத்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே, பொது சிவில் சட்ட வரைவை உருவாக்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

பொது சிவில் சட்ட வரைவை உருவாக்குவதற்காக, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இக்குழு 2.33 லட்சம் பொது மக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பழங்குடியின குழுக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தது. இந்த கருத்துகளின் அடிப்படையில் பொது சிவில் சட்ட வரைவு தயாராகிவிட்டதாகத் தெரிகிறது.

சிறப்பு கூட்டத்தொடர்: இந்நிலையில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடரை அடுத்த வாரம் கூட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

பலதார திருமணத்துக்கு தடை விதிப்பது மற்றும் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் தம்பதிகள் அரசிடம் பதிவு செய்து கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் தத்தெடுத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் மத வேறுபாடு இல்லாமல் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்த பொது சிவில் சட்டம் வகை செய்கிறது. இந்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்பது பாஜக.வின் முக்கிய கொள்கையாக உள்ளது.

இதற்காக பாஜக ஆளும் மாநிலங்களில் முதல் கட்டமாக சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்படுகின்றன. படிப்படியாக நாடு முழுவதும் இந்த சட்டத்தை அமல்படுத்த பாஜக தீவிரமாக உள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: