வத்தலகுண்டு: வத்தலக்குண்டு அருகே காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் நள்ளிரவில் கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். வருவாய்த் துறையினர் இரவோடு இரவாக களம் இறங்கி இதற்கு தீர்வு கண்டனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ப.விராலிப்பட்டி கிராமத்தில் ஓடை செல்கிறது. கடந்த சில தினங்களாக இப்பகுதியில் மழை பெய்வதால் ஓடையில் அளவாக தண்ணீர் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் வத்தலகுண்டு சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

விராலிப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே ஓடைப் பாலத்தில் முட்கள் அடித்து வரப்பட்டு திடீரென அடைப்பு ஏற்பட்டது. இதனால் திசைமாறி மழைநீர் ஓடையில் செல்ல முடியாமல் திடீரென ஊருக்குள் புகுந்தது. இதனால், கிராமத்தில் தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளுக்கும் வெள்ளநீர் புகுந்ததால் கிராமமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். தகவல் அறிந்து நள்ளிரவில் வந்த வருவாய் மண்டல துணை வட்டாட்சியர் மூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் சரண்யா, ஊராட்சித் தலைவர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் உள்ளிட்டோர் மழைநீர் புகுந்த வீடுகளில் உள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: