ஒவ்வொரு வாரயிறுதியிலும் கமல் போட்டியாளர்களைத்தான் காப்பாற்றுவார். இந்த வாரத்தில் வித்தியாசமாக ‘தன்னையே காப்பாற்றிக் கொள்ளும்’ பகீரதப் பிரயத்தனத்தில் அவர் ஈடுபட்டது ஏமாற்றம். பிரதீப் ரெட் கார்ட் விஷயத்தில் தனக்கும் அந்த முடிவிற்கும் சம்பந்தமில்லை’ என்பது போல் நிறுவ முயன்று, அனைத்துப் பந்துகளையும் புகார் சொன்னவர்கள் மீது தள்ளிய ‘டேமேஜ் கண்ட்ரோல்’ டிராமா ரசிக்கும்படியாக இல்லை.

கமல்

‘எந்த முறையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்தீர்கள்?’ என்று ஒரு நீதிபதியிடம் விசாரிக்கும் போது ‘சாட்சியம் சொல்ல வந்தவர்களிடமே அந்தப் பொறுப்பை விட்டு விட்டேன். அவர்களிடமே அந்த அதிகாரத்தைத் தந்து விட்டேன்’ என்று அந்த நீதிபதி சொன்னால் அது எத்தனை அபத்தமாக இருக்கும்?! இறுதி முடிவை அவர்தானே எடுக்க வேண்டும்? அதற்கான பொறுப்பையும் அவர்தானே ஏற்க வேண்டும்? இந்த எபிசோடின் மூலம் தான் எதிர்கொள்ள வேண்டிய அக்னிப் பரீட்சையை கமல் நியாயமாக எதிர்கொள்வார் என்று பார்த்தால் ‘அய்யோவ்.. நெருப்புடோவ்’ என்று கவுண்டமணி மாதிரி பின்வாங்கி விட்டார்.

பிரதீப்பின் வெளியேற்றம் தொடர்பாக வெளியில் எழுந்த எதிர்ப்பு மற்றும் சர்ச்சையிலிருந்து தங்களை முழுவதுமாக பாதுகாத்துக் கொள்ள கமலும் சானலும் இணைந்து ஆடிய இந்த ஒரு அபத்த நாடகத்தைத் தவிர, எபிசோடில் நடந்த இதர சம்பவங்கள் அனைத்தும் தரமான சம்பவங்களே!.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

‘இந்தத் தீர்வு நியாயமானதுதானா?.. குற்றம் சாட்டியவர்கள் பேசுவது உண்மையா?.. அப்படியே அது உண்மையாக இருந்தாலும் குற்றம் சாட்டியவர்கள் மட்டும் என்ன யோக்கியமா?.. இப்படியான பல கேள்விகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கான தெளிவு இன்றைய தின முடிவிற்குள் உங்களுக்குத் கிடைத்து விடும். அதற்குப் பிறகு இந்த மாதிரி கேள்விகளையெல்லாம் கேட்டிருக்க வேண்டுமா என்ற தெளிவு கூட உங்களுக்கு வரலாம்”

என்கிற துல்லியமான முன்னுரையோடு கமல் அரங்கிற்குள் வந்த போது ‘ஐ.. சூப்பரப்பு.. இன்னிக்கு எபிசோடு தீ பறக்கப் போகுது. கமலைத் திட்டிவனங்களுக்கு எல்லாம் சரியான விளக்கத்தின் மூலம் அவர் பதிலடி தரப் போகிறார்’ என்று ஆவலாக நிமிர்ந்து அமர்ந்தால்… உஸ்ஸ்ஸ்… ப்பாபாபா.. முடியல.

பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்

பொதுவாக பிக் பாஸில் குறும்படம் என்பதே மிக அபூர்வமான, எப்போது போடுவார்கள் என்கிற ஆவலைக் கிளப்பும் விஷயம். ஆனால் இன்று வந்தவுடனேயே பல குறும்படங்களை சுண்டல் மாதிரி இறைத்து, அதன் மதிப்பையே கமல் கெடுத்து விட்டார். அந்தக் குறும்படங்கள் அனைத்துமே ‘யப்பா.. பார்த்துக்கங்க.. இதுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல.. எல்லாமே நீங்க எடுத்த முடிவுதான். கமல் சாருன்னு என்னை இழுக்காதீங்க. அம்புட்டுத்தான் சொல்லுவேன்’ என்று சுத்தமாக கைகழுவும் முயற்சிகளாகவே இருந்தன.

‘இந்த வீட்டிற்கு நான் பொறுப்பு’ என்று எப்போதும் அழுத்தம் திருத்தமாக சொல்லும் கமல், இந்தச் சமயத்தில் மட்டும் ‘முடிவு நீங்கள் எடுத்தது’ என்று இந்த விவகாரத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள எடுத்த முயற்சி நியாயமானதல்ல.

சுண்டல் போல் இறைபட்ட குறும்படங்கள்

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், பார்வையாளர்களிடம் பேசுவதுபோல் ஒரு நாடகத்தை ஆரம்பித்தார். ‘உங்களுக்கு ஞாபகமிருக்கும். ஆனா உள்ள இருக்கற மறதிக்காரங்களுக்காக இதைப் போடறேன்’ என்று வரிசையாக சில படங்களை வெளியிட்டார். எடிட்டிங் என்பது எத்தனை சிறந்த வடிவம் என்பது மறுபடியும் நிரூபணம் ஆன தருணம் இது. எந்தவொரு விஷயத்தையும், எப்படி வேண்டுமானாலும் கலைத்துப் போட்டு ஆடலாம் என்பதுதான் எடிட்டிங் கலை என்பதின் வலிமை.

பந்துகளை போட்டியாளர்களிடம் தள்ளி விடுவதற்குப் பதிலாக ‘பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் என்ன?’ என்பதை குறும்படங்களின் மூலம் கமல் வலுவாக செய்திருந்தால் இந்த ‘டேமேஜ் கன்ட்ரோல்’ நாடகம் ஒருவேளை வெற்றியடைந்திருக்கலாம்.

குறும்படம் ஒளிபரப்பப் படுதல்

கமல் வெளியிட்ட படங்களின் வரிசை இப்படியாக இருந்தது. முதல் படத்தில் போட்டியாளர்கள் உரிமைக்குரல் புகார்களை வரிசையாக எழுப்புகிறார்கள். ‘நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைன்னா இது ஏன் நடந்தது?’ என்று கேட்கிற கமல், அடுத்த படத்தைக் காண்பிக்கிறார். அதில் ‘ரெட் கார்டு கொடுப்பாங்கன்னு நாம எதிர்பார்க்கலை. மஞ்சள் கார்டு தந்து வார்னிங் பண்ணி அனுப்பிடுவாங்கன்னுதான் எதிர்பார்த்தோம். பிரதீப் வெளிய அனுப்பறதை நாம பிளான் பண்ணலை” என்று பெண்கள் அணி பேசிக் கொண்டிருக்கிற வீடியோ அது.

‘நாங்க சொன்ன விஷயங்களை எங்களாலயே எதிர்கொண்டிருக்க முடியும். ஆனா அந்த விஷயங்களை அவரால (கமல்) பொறுத்துக் முடியல. அதனால உடனே ஆக்ஷன் எடுத்தாரு. நாங்க சொன்ன விஷயங்கள் எல்லாம் சானலுக்கு முக்கியமாகப் பட்டதனால அவங்க பிரதீப்பை தூக்கினாங்க’ என்று தன்னுடைய தரப்பை மிகத் திறமையாக தொகுத்த பூர்ணிமாவின் பேச்சு முக்கியமானது. ‘விமன் சேஃப்டி’ன்னு சொன்ன முதல் பர்ஸன் யாரு? கமல் சார்” என்று ஒரு டாஸ்க்கின் போது சொல்லி அவரை உள்ளே இழுத்து விட்டார் ஜோவிகா.

கமல் ஆடியது சேஃப் கேமா?

மறுபடியும் கமல். “நான் உள்ளே போய் பேசிட்டு வந்தேன். என்ன முடிவு எடுத்தோம்னா.. அதிகாரத்தை உங்க கிட்ட தரலாம்ன்னு. ஆனா நீங்க என்ன பண்ணீங்க?” என்று அடுத்த வீடியோவைத் திரையிட்டார். அதில் பெரும்பாலோனோர் ரெட் கார்ட் தந்த காட்சிகள் வரிசையாக காட்டப்பட்டன.

‘அதிகாரத்தை உங்களிடம் தருவது என்று நாங்கள் எடுத்த முடிவு அது. தீர்ப்பு அல்ல. முடிவு. பயமா இருக்குன்றீங்க.. உங்க டிக்ஷனரில இருந்து எடுத்து வார்த்தைதான் அது. நானா எதையும் தூண்டிக் கொடுக்கலை. நீங்க உரிமைக்குரல் எழுப்பியதால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதாக இருந்தது. எப்படி நாங்கள் முடிவெடுத்தாலும் அது விமர்சிக்கப்படலாம் என்பதால் சம்பந்தப்பட்டவர்களிடமே அந்த முடிவைக் கொடுத்துட்டோம். Unplugging.

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

பெண்களுக்கு அச்சுறுத்துவது போல் இருக்கும் விஷயத்தை முதலில் அங்கிருந்து அகற்ற வேண்டியது சமூகக் கடமை. ரெட் கார்டு நீங்கதானே கொடுத்தீங்க.. அது மஞ்சளாவா தெரிஞ்சது.. Colour blindness இல்லல்ல” என்றெல்லாம் தன் தரப்பை திறமையாக திணித்துக் கொண்டிருந்தார் கமல்.

உரிமைக்குரலை எழுப்பியவர்கள், தன்னையும் உள்ளே இழுத்ததால், அதிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டு, இதன் விளைவுக்கு அவர்களை மட்டும் பொறுப்பாக்கும் சேஃப் கேம் விளையாட்டை கமல் நன்றாகவே ஆடினார். “நீங்க பொய் சொல்லல.. இல்லையா.. அப்படிச் சொல்லியிருந்தா அதுதான் பெரிய குற்றம்” என்பதை மறுபடி மறுபடி விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டார்.

‘ரெட் கார்ட்’ சர்ச்சையை எப்படி தவிர்த்திருக்கலாம்?

எனில் கமலின் தரப்பு என்னதான் செய்திருக்க வேண்டும்? விஜய் வன்முறையில் ஈடுபட்ட விவகாரத்தில் முதலில் மஞ்சள் கார்டு தரப்பட்டது. அதே எச்சரிக்கைதான் பிரதீப்பிற்கும் தரப்பட்டிருக்க வேண்டும். “மீண்டும் இது போன்ற புகார்கள் வந்தால் நிச்சயம் வெளியேற்றப்படுவீர்கள்” என்கிற வார்னிங்கை அழுத்தமாகத் தந்திருக்க வேண்டும்.

உரிமைக்குரல் எழுப்பியவர்களின் குரலை தனியறையில் ஜனநாயக முறையில் கமல் கேட்டது நல்ல விஷயம். ஆனால் அதற்கான இறுதி முடிவை கமல்தான் எடுத்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் யார் பொய் சொல்கிறார்கள் என்பதற்கான அனைத்துத் தரவுகளும், பரிசோதித்துப் பார்க்கும் வசதியும் பிக் பாஸ் டீமிடம் இருக்கிறது. எனவே அவற்றை சாட்சியங்களாக வைத்து முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம். இது வெளியே கடுமையாக விமரிக்கப்பட்ட போது “பாருங்கப்பா.. பிரதீப் இப்படியெல்லாம் நடந்துட்டு இருக்காரு.. வெளியே அனுப்பாம என்னதான் பண்றது… சொல்லுங்க” என்று அவை சம்பந்தமான குறும்படங்களை வெளியிட்டிருந்தால் இந்த எபிசோடின் கனம் கூடியிருக்கும். பிக் பாஸின் தரப்பில் நியாயம் உள்ளது என்பது பட்டவர்த்தனமாக தெளிவாகியிருக்கும்.

கமல்

உரிமைக்குரல் எழுப்பப்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே பிரதீப்பிற்கு உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட்டது முறையானதல்ல. முந்தைய சீசனில் நடிகர் சரவணன் சொன்ன விவகாரமான கருத்து ஒன்றையும் மறைமுகமாகக் குறிப்பிட்ட கமல், ‘அப்ப இந்த விசாரணைகூட இல்ல. அப்படியே வெளியே அனுப்பிச்சிட்டோம்’ என்றார். அதுவுமே அதீதமான நடவடிக்கைதான். சரவணன் சொன்னது ஒரு தற்செயலான சறுக்கல். அது பற்றிய எச்சரிக்கையை அவரிடம் தந்து விட்டு பொதுவான உபசேத்தையும் தந்திருக்கலாம். யார் வெளியேறலாம், யார் வெளியேறக்கூடாது என்கிற வாய்ப்பை வாக்குகளின் மூலம் பார்வையாளர்களுக்குத் தந்து விட்டு இடையில் இவர்களின் விருப்பம் போல் முடிவு எடுப்பதை பார்வையாளர்கள் நிச்சயம் ரசிக்க மாட்டார்கள்.

‘ஒரு முடிவு எடுத்துட்டா அதுல உறுதியா இருக்கணும். உங்களுக்கே அதுல சந்தேகம் வந்துடுச்சுன்னா அது மக்களுக்குப் பிடிக்காது’ என்று இந்த எபிசோடில் கமல் சொன்னதை அவருக்கே கூட பொருத்திப் பார்க்கலாம்.

ரெட் கார்டும் தேர்தல் வாக்குச் சீட்டும்

பிரதீப்பின் ஒழுங்கீனங்கள் வீட்டில் உள்ள பெரும்பான்மையானவர்களுக்கு அகரீதியான உளைச்சலை அளித்திருக்கிறது என்பதையும் சுரேஷின் விவகாரத்தையொட்டி இதை ஒரு புகாராக எழுப்ப பெண்கள் அணி முடிவு செய்தார்கள் என்பதையும் நம்மால் உணர முடிகிறது. ஆனால் அது ரெட் கார்ட் என்கிற உச்சமான முடிவிற்கு செல்லும் என்பதை அவர்களே எதிர்பார்க்கவில்லை. அதற்காக எந்தவித முன்கூட்டிய திட்டத்தையும் அவர்கள் செய்யவில்லை என்பதை அவர்களின் வாக்குமூலங்களில் இருந்து உணர முடிகிறது.

எனில் ‘ரெட் கார்ட் வாய்ப்பை தனியறையில் தந்த போது ஏன் தந்தார்கள், இது அவர்கள் எடுத்த முடிவுதானே?’ என்று கமல் மடக்கியது ஒரு நல்ல செக்மேட். இதற்கு அவர்களிடம் பதிலே கிடையாது. அப்போதைய உணர்ச்சி வேகத்தில் முடிவெடுத்தது மிகப் பெரிய தவறு. பிறகு வருந்துவதில் உபயோகமில்லை.

ஐஷூ

போட்டியாளர்கள் செய்த இந்தத் தவறை தேர்தல் நேரத்து வாக்காளர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஐந்தாண்டுகளுக்கு தங்களை ஆளப் போகிறவர்கள், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்காமல், அப்போதைய வாக்குறுதிகளில், கவர்ச்சிப் பரிசுகளில், அனுதாபங்களில் எளிதில் விழுந்து ‘வாக்குச் சீட்டு’ என்னும் மகத்தான வாய்பபை தற்காலிக உணர்ச்சி வேகத்தில் தொலைத்து விடுகிறோம் பின்பு ‘குத்துதே. குடையுதே’ என்று நாம் அனத்த வேண்டியதுதான். ‘ரெட் கார்ட்’ விஷயத்தில் போட்டியாளர்கள் அனத்துவதும் இப்படித்தான் இருக்கிறது.

பிரதீப் தரப்பில் பிழையே இல்லையா?

பிரதீப் வெளியேற்றத்திற்கு, உரிமைக்குரல் எழுப்பியவர்களும், கமல் மற்றும் சானல் மட்டும்தான் காரணமா? இதில் பிரதீப்பின் பங்கும் நிச்சயம் இருக்கிறது. ஜாலியான மனநிலைகளில் விளையாட்டாக தவறுகளை இழைத்து விடுவது வேறு. ஆனால் இது பற்றிய விசாரணை நேரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தச் சமயத்தில் கூட ‘நான் நாலு வயசுல இருந்து கெட்ட வார்த்தை பேசறவன்.. வெளியே போனா கூட எனக்குப் பிரச்சினையில்ல.. சுரேஷ் செஞ்சது மட்டும் சரியா.. நான் உணர்ச்சி வேகத்துல செயல்படறவன். இல்லைன்னா கவர்ன்மென்ட் வேலைலயே இருந்திருப்பேன்.. ‘ என்றெல்லாம் சம்பந்தம் இல்லாமல் பேசியதும் இதன் உச்சக்கட்டமாக `உச்சா’ போன விவகாரத்தை ‘அப்படித்தான் பண்ணுவேன்’ என்று சபையிலேயே அழிச்சாட்டியம் செய்ததும் பிரதீப்பின் மிகப் பெரிய சறுக்கல்.

இந்த எபிசோடின் ஒரு இடைவேளையில் பார்வையாளர்களிடம் மட்டும் கமல் பேசியதை இங்கு நினைவுகூரலாம். “மற்ற விஷயங்களையெல்லாம் பேசிட்டோம். ஆனால் இன்னமும் ஒரு கேள்வி எஞ்சி இருக்கிறது. பிரதீப் பேசுவதற்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை? கொடுத்தோம். ஆனால் அவர் தன் தவறுக்கு வருந்தாமல் மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். ‘நாலு வயசுல இருந்து கெட்ட வார்த்தை பேசுவேன்’ ன்னு தனக்கான குழியை தானே வெட்டிக் கொண்டிருந்தார். இன்னமும் ஆழமா வெட்டிப்பாரோன்னுதான் நிறுத்த வேண்டியதா போச்சு. அவரைத் தொடர விட்டிருந்தா, இந்த விளக்கத்தை இப்ப அளிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது’ என்று கமல் சொன்னது சரியான விஷயம். ஆகவே பிரதீப்பின் வெளியேற்றத்தை சர்ச்சையாக்குகிறவர்கள், இதையும் கூட பார்க்க வேண்டும்.

பிரதீப்

விளையாட்டிலிருந்து வெளியே சென்ற பிறகுகூட பிரதீப்பின் மிகையான தன்னம்பிக்கைத் தொனி குறையவில்லை என்பதையே அவரது டிவிட்டர் பதிவுகள் காட்டுகின்றன. ‘என்னை மறுபடியும் உள்ளே அனுப்புங்க. யாருன்னு காட்டறேன். ஆனா நான் சொன்னபடி செய்யணும். கெட்ட பய சார் இந்த காளி’ என்பதெல்லாம் வெற்று சீன் போடுவது போல்தான் இருக்கிறதே ஒழிய, ‘என்னையும் அறியாமல் மற்றவர்களுக்கு இடையூறு தந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன்’ என்று ஒரு வார்த்தையும் இல்லை. அப்படிச் சொல்லியிருந்தால் அவரின் மீதான மதிப்பு உயர்ந்திருக்கும்.

பிக் பாஸிற்கு முன்னால் பிரதீப் என்பவர் யார் என்பது உலகிற்கு பரவலாக தெரியாது. எனவே இந்த மேடையை அவர் திறமையாக பயன்படுத்தியிருக்க வேண்டும். ‘எனக்கு கேம் ஆட பிடிக்கும்’ என்று அடிக்கடி சொல்பவர் பிரதீப். ஒரு நல்ல போர் வீரனுக்கு எப்போது வேகமாக முன்னேறிச் செல்ல வேண்டும் என்று தெரிந்திருக்கிற அதே சமயத்தில், எப்போது பின்வாங்க வேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு காளை மாதிரி மூர்க்கமாக எப்போதும் முன்னாடியே ஓடக்கூடாது. தன்னுடைய மிதமிஞ்சிய தன்னம்பிக்கையை எப்போதும் ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது.

இப்போதைய மக்கள் ஆதரவும் புகழும் தற்காலிகமே. அவர்கள் அடுத்த பிரதீப்பிற்கு பிறகு கைத்தட்ட போய் விடுவார்கள் என்கிற நிதர்சனத்தை அவர் உணர வேண்டும். இந்த ஆட்ட சூட்சுமம் தெரிந்திருந்தால் அவர் ரெட் கார்டிலிருந்து தப்பித்திருப்பார்.

‘பெண்கள் உரிமை என்பது பேசப்பட வேண்டிய விஷயம்’

‘பெண்கள் பாதுகாப்பு’ புகார் விஷயத்தை வெச்சு விசித்ரா மறுபடி மறுபடி தூண்டி விடறா மாதிரியே பேசினாங்க. சார். பிரதீப் வெளியே போனதுக்கு நீங்கதான் காரணம்ன்ற மாதிரி எங்க கிட்ட சொல்லிட்டே இருந்தாங்க. அதுக்குத்தான் நாங்க விளக்கம் அளிக்க வேண்டியதா போச்சு. அந்தப் பஞ்சாயத்துல உங்களையும் இழுத்துட்டோம்’ என்பது மாதிரி பூர்ணிமா குழு, விசித்ரா குழு மீது குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது.

என்ன காரணத்தைச் சொல்லி ஒருவர் நாமினேட் செய்கிறார் என்பது அவருடைய உரிமை. ‘உண்மையிலேயே இங்கே பெண்கள் பாதுகாப்பாக இல்லையா?’ என்று விசித்ரா கருதியிருந்தால் அது அவருடைய நியாயம். நாமினேஷன் முடிந்தவுடனே, அதற்கான காரணத்தை அறிந்த பிறகு, மாயா குழு கூட்டமாகச் சென்று விசித்ராவை காரசாரமாக கேள்விகள் கேட்டதால்தான் இத்தனை பிரச்னைகளும் பெரிதாக வெடித்தன. இந்த வாரமே கலவர பூமியாக மாறியதற்கு அதுதான் முதல் விதை.

விசித்ரா, அர்ச்சனா, தினேஷ்

மாறாக இது முக்கியமான சமூகப் பிரச்சினை என்பதால் இரு தரப்புமே அதற்கான பொறுப்புடன் நிதானமாக அமர்ந்து பேசியிருக்கலாம். ‘பிரதீப் நல்லவன்னு நான் சொல்ல வரல’ என்று ஒரு கட்டத்தில் பாதுகாப்பாக பேசுகிற விசித்ரா, எதற்கு இவ்வளவு தூரம் மல்லுக்கட்டுகிறார்? ஒரு பெண்ணாக மற்றவர்களின் சங்கடத்தை ஏன் அவரால் உணர முடியவில்லை? ‘அவங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு இதைச் செய்யலைன்றதுதான் அவங்க பிரச்சினை’ என்று பூர்ணிமா தரப்பு புகார் சொல்வதை முற்றிலுமாக புறக்கணிக்க முடியவில்லை. இது சார்ந்த அகங்காரமும் விசித்ராவை இயக்குகிறது. தன்னிடம் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்பதை பல சமயங்களில் பதிவு செய்கிறார். தங்களை வெறுப்பேற்றுகிற மாயா குழுவிற்கு பதிலடி தர வேண்டும் என்கிற வேகம் மட்டும்தான் விசித்ராவிடம் இருக்கிறதே தவிர, ஒரு முக்கியமான பிரச்சினையை மூத்தவராக கரிசனத்துடன் அணுகுகிற முதிர்ச்சியோ, நிதானமோ அவரிடம் இல்லை.

விசித்ரா, அர்ச்சனா

‘விமன் கார்டு ஏன் எழுப்பினீங்கன்னு கேட்காதீங்க. இந்த விஷயத்தில் பெண்கள் தங்களின் உரிமைகளை எழுப்பியே ஆகணும். நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கே முந்நூறு வருஷம் மேல ஆயிடுச்சு. தாமதமாகச் சொல்வதாலேயே குற்றம் நடக்கவில்லை என்று ஆகி விடாது. பிக் பாஸ் வீட்டில் இத்தனை காமிராக்கள் இருக்கின்றன. வீட்டிலும் அத்தனை கண்கள் இருந்தாலும் சில குற்றங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அவை சொல்ல மறக்கப்படக்கூடாது. மறைக்கப்படக்கூடாது. விக்டிம்மையே குற்றவாளிகளாக ஆக்கி கூடுதல் சுமையை அவங்க தலை மேல வெக்காதீங்க’ என்றெல்லாம் கமல் பேசிய அதே விஷயங்கள், இந்தக் கட்டுரைத் தொடரிலும் முன்பே பிரதிபலித்தவை என்பதை நினைவுகூரலாம்.

மாயா கூட்டணியை வறுத்தெடுத்த கமல்

‘ஆண்களால் பெண்களுக்கு ஏற்படுகிற பாதுகாப்பின்மை உணர்வு போலவே பெண்களாகிய எங்களுக்கே இங்க பெண்கள் கிட்ட இருந்து பாதுகாப்பில்லையே’ என்று விசித்ரா கேள்வி எழுப்ப பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல் கேட்டது. டூத் பிரஷ் தர மறுத்தது முதற்கொண்டு மாயாவின் கேப்டன்ஸியில் நிகழ்ந்த க்ரூப் அட்டாக் வரை பல விஷயங்களை கேள்விகளாக கேட்டு மாயா கூட்டணியை வறுத்தெடுத்தார் கமல். பெரும்பாலான நேரங்களில் மாயா மற்றும் பூர்ணிமாவின் முகங்கள் இறுக்கமாக இருந்தன. ஒருவரின் கையை இன்னொருவர் அழுத்தமாகப் பற்றிக் கொண்டிருந்தது, அவர்களுக்குள் இருந்த பதட்டத்தைக் காண்பித்தது. ‘ஸாரி ஸார். தெரியாமப் பண்ணிட்டேன்’ என்று எளிதாக எஸ்கேப் ஆனார் மாயா. ஆனால் இந்த மன்னிப்பு நாடகத்தையே குறும்படமாகப் போட்டு கிண்டல் செய்யவும் கமல் தவறவில்லை.

மாயா, பூர்ணிமா

டூஷ் பிரஷ் மறுக்கப்பட்ட விவகாரத்தை அஹிம்சை முறையிலும் சுயமரியாதையுடனும் விசித்ரா எதிர்கொண்ட விதத்தை கமல் பாரட்டினார். மேலும், மாயா குழு செய்த கிண்டல் கொடுமைகளில் இருந்து அர்ச்சனாவை பாதுகாத்த விஷயத்திற்காகவும் விசித்ராவைப் பாராட்டினார். இது நல்ல விஷயம். வீட்டின் மூத்தவராக இதே கரிசனத்தை பெண்கள் கூட்டணி மீதும் விசித்ரா காட்டியிருந்தால் அவரின் மதிப்பு இன்னமும் உயர்ந்திருக்கும். ‘என் கிட்ட பிரதீப் பிரச்சினை பண்ணலை. என்னால ஈசியா ஹாண்டில் பண்ண முடிஞ்சது’ என்பதோடு அவர் ஒதுங்கியிருக்கக்கூடாது. பெண்கள் அணி போதுமான விளக்கத்தை அளித்த போது ‘ஓகே.. ஐ ஆம் வித் யூ’ என்று சொன்ன விசித்ரா, விரோதம் தலைதூக்கும் போது பழைய படி பல்டியடித்து பிரதீப்பிற்கு ஆதரவான நிலைக்கு மாறியிருக்கக்கூடாது. எனில் அவருமே சூழலுக்கு ஏற்ப கேம் ஆடுகிறார் என்பதாகி விடும். அப்படித்தான் ஆனது.

ஜோவிகா

‘தனக்கு மரியாதை தரவில்லை, குழந்தை என்றெல்லாம் கிண்டல் செய்கிறார்கள்’ என்றெல்லாம் கண்கலங்கிக் கொண்டிருந்தார் ஜோவிகா. ‘தான் எதிர்பார்க்கும் அதே மரியாதையை மற்றவர்களுக்கும் தர வேண்டும்’ என்று விதம் விதமான வார்த்தைகளில் அவருக்கு கமல் உபதேசம் செய்தார். ஆத்திரம் கொள்ளும் சமயங்களில் ஜோவிகாவின் உடல்மொழியும், உதிர்க்கும் வாசகங்களும் ரசிக்கத்தக்கதாக இல்லை. “அவங்க சொல்ற feedback-ஐ உள்வாங்கிக்க டிரை பண்ணுங்க. உடனே விரலை விட்டு வாந்தியெடுக்காதீங்க” என்று உபதேச வார்த்தைகளை கமல் திறமையாக பயன்படுத்திய விதம் நன்று.

எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டிருந்தாலும் இவர்கள் தனித்தனியாக அமர்ந்து பேசியிருந்தால் பெரும்பாலான சமயங்களில் சுமுகமான முடிவை எட்டியிருக்கலாம். சில சமயங்களில் அப்படி எட்டியும் இருக்கிறார்கள். மாறாக எதுவொன்றிற்கும் நால்வர் அணி கும்பலாகச் சென்றதால்தான் பிரச்சினைகள் மேலும் வெடித்தன. நீடித்துக் கொண்டேயிருந்தன.

கடந்த சீசன்களில் எல்லோருக்குமே வீட்டுப் பணி பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் இந்த சீசனில் பெரிய வீட்டிற்கு செய்ய வேலையே இல்லாததால் வம்புகளும் புறணிகளும் சர்ச்சைகளும் இரு மடங்காகி இருக்கின்றன. ‘An idle mind is the devil’s workshop’ என்பது ஒரு பிரபலமான வாக்கியம்.

இந்த வாரம் வெளியேறப் போகிறவர் யார்?

“வேற எந்தவொரு பிக் பாஸ் ஷோலயும் இந்த decorum இருக்கறதா நான் நெனக்கல. மரியாதைன்றது தட்டிக் கேட்டு வாங்கறதில்ல. கொடுத்து வாங்கறதுதான். சின்ன வயசுல நான் கூட நிறைய கெட்ட வார்த்தை பேசுவேன். சூழல் அப்படி. ஸ்கூல் கத்துக் கொடுக்க வேண்டிய விஷயங்களை எல்லாம் எனக்கு வாழ்க்கைத்தான் கத்துக் கொடுத்துடுச்சு. குறிப்பிட்ட நேரத்துல எங்க அண்ணன் எனக்கு ஒரு ‘ரெட் கார்டு’ கொடுத்தாரு. அன்றில் இருந்து நான் கெட்ட வார்த்தை பேசறது கிடையாது. முக்கியமா கோவம் வரும் போது பேச மாட்டேன். என்னோட மகள்கள் முதற்கொண்டு எல்லோரையும் வாங்க போங்கன்னுதான் மரியாதைத்தான் பேசுவேன். இதை வயசானாதான் கத்துக்கணும்ன்னு இல்லை. முன்னாடியே கூட கத்துக்கலாம்” என்றெல்லாம் கமல் ஜோவிகாவிற்கு சொன்னதில் பிரதீப்பிற்கான செய்தியும் இருக்கிறது.

அர்ச்சனாவிற்கு பிறந்த வாழ்த்து சொன்னதோடு கமல் விடைபெற்றார். இதுவே அர்ச்சனா காப்பாற்றப்பட்டதற்கான மறைமுக செய்தியாகவும் இருக்கலாம். கமல் அகன்ற பிறகு ஜோவிகாவும் அர்ச்சனாவும் ஒருவரையொருவர் கட்டியணைத்து மன்னிப்பு கேட்டது ஒரு நல்ல காட்சி.

இந்த வாரத்தோடு பிரதீப் வெளியேற்றம் தொடர்பான சர்ச்சைகள் ஓயலாம். பிரதீப் வெளியேற்றப்பட்டது துரதிர்ஷ்டமானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அது மிகப்பெரிய சமூகஅநீதி என்பது போல் சமூகவலைத்தளங்களில் புரட்சிகரமாக பொங்குவது மிகையான எதிர்வினை. பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு அவரும் ஒரு பிரதான காரணமாக இருந்தார் என்கிற உண்மையையும்,அவருடைய ஆதரவாளர்கள் சற்று நிதானமாக யோசித்துப் பார்க்கலாம்.

இந்த வாரத்தில் ஐஷூ வெளியேறுகிறார் என்று தெரிகிறது. எனில் நிக்சனின் ஆட்டம் என்னவாக மாறும் என்று பார்க்க வேண்டும். ‘திரிஷா இல்லைன்னா.. நயன்தாரா’ என்கிற திரைப்பட டைட்டில் மாதிரி அக்ஷயா பக்கம் ஒதுங்கி விடாமல் இனியாவது தனி ஆட்டக்காரராக நிச்கன் மாற வேண்டும்.

அடுத்த வார கேப்டன், அதன் மூலம் வீட்டு உறுப்பினர்கள் மாறப் போகும் நிலைமை ஆகியவற்றைப் பொருத்து மேலும் பல திருப்பங்களும் சுவாரசியங்களும் நிகழலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

கமலின் நேற்றைய பேச்சு குறித்து உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: