திருநெல்வேலி: திருநெல்வேலியில் தூக்க மாத்திரைகளைத் தின்று பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில், தற்கொலைக்குத் தூண்டியதாக கிறிஸ்தவ மத போதகர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (39). கிறிஸ்தவ மதபோதகரான இவர், திருநெல்வேலியை அடுத்துள்ள தச்சநல்லூர் பகுதியில் வசிக்கிறார். மேலும், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில்ஜெபக் கூட்டமும் நடத்தி வருகிறார்.
இந்த ஜெபக் கூட்டத்துக்குச் சென்ற 40 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு, ஜெகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மன உளைச்சலுக்கு உள்ளான அந்தப் பெண், தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்,
தீவிர சிகிச்சை: வீட்டில் மயங்கிக் கிடந்த அந்தப் பெண்ணை உறவினர்கள் மீட்டு, திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், தற்கொலைக்குத் தூண்டியதாக ஜெகன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.