ஈரோடு: ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை திருட்டு வழக்கில் தொடர்புடைய ஆந்திராவைச் சேர்ந்தவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து நகைகளைப் பறிமுதல் செய்தனர். ஈரோடு கணபதி நகரைச் சேர்ந்தவர் துரைசாமி. ஆடிட்டர். கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், 150 பவுன் நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட எஸ்பி ஜவகர் உத்தரவின்படி, டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

திருட்டு நடந்த வீட்டினைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த 1,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர். மேலும், முன்னாள் குற்றவாளிகள் மற்றும் அவர்களின் திருடும் முறைகள் குறித்து விசாரிக்கப்பட்டது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் குற்றவாளி வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர் என தனிப்படை போலீஸார் கண்டறிந்தனர்.

இந்நிலையில், போலீஸாரால் சந்தேகிக்கப்படும் நபர் ஈரோடு வந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதையொட்டி நடந்த வாகனச் சோதனையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மானுகொண்ட அனில்குமார் (32) என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அனில் குமார்.

இதில், ஆடிட்டர் துரைசாமி வீட்டில் அனில்குமார் நகைகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 150 பவுன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். மானுகொண்ட அனில்குமார் மீது, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

சிசிடிவி கேமரா அவசியம்: பறிமுதல் செய்யப்பட்ட நகைகளைப் பார்வையிட்ட எஸ்பி ஜவகர் கூறியதாவது: ஆடிட்டர் வீட்டில் நடந்த திருட்டு வழக்கில், குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிசிடிவி கேமரா மிக முக்கிய பங்கு வகித்தது. எனவே, பொதுமக்கள், வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளில் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமரா வைக்க வேண்டும்.

மேலும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் மக்கள் இதுகுறித்து அருகே உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். உங்கள் தெருக்களில் சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: