stalin

நகர்ப்புறங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது கிராமப்புறங்களும் வளர்ந்தாக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
கிராம சபைக் கூட்டத்தில் காணொலிக் காட்சி வாயிலாக அவர் ஆற்றிய உரை, நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்ததற்குப் பிறகுதான், கிராம சபை கூட்டங்களை முறையாக – தடங்கல் இல்லாமல் நடத்தி கொண்டு வருகிறோம்.
கிராமப்புற மக்களுடைய குரல் எப்போதும் எந்தச் சூழலிலும் தடையில்லாமல் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோல கிராம சபைக் கூட்டங்களை தடையில்லாமல் நடத்துகிறோம்.
மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான். காஞ்சிபுரம் பக்கம் இருக்கிற உத்தரமேரூர் வட்டாரம் தான் ஜனநாயகத் தேர்தல் அமைப்பு முறை பிறந்த தொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு இதை சொல்கிறது.
அந்த வகையில் பார்த்தால் கிராமங்களில்தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ‘கிராம சபை’ என்ற அமைப்பு தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சோழர் காலந்தொட்டே பழக்கத்தில் இருந்து வருகிறது.
ஒரு அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். நிதி ஆதாரங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டும். கிராம சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
கிராம சபையில், ஊராட்சிகளுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான கருத்துகளை மட்டுமே விவாதிக்க வேண்டும். ஊராட்சியினுடைய எல்லாப் பகுதிகளும் முழுமையான வளர்ச்சியை அடைய, அங்கே கூடியிருக்கக்கூடிய அலுவலர்களிடத்தில், அவர்கள் துறை மூலமாக மேற்கொள்ளப்படுகிற திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயனடைந்து கொண்டு வருகிறார்கள்.
விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்கிற வாய்ப்பை அரசு வழங்கியிருக்கிறது. இந்தத் திட்டத்தில் கிராமப்புறப் பெண்கள்தான் அதிகமாக பயனடைகிறார்கள். 1000 ரூபாய் என்பது அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் மிகுந்த உதவியாக இருக்கிறது. இன்னும் சொன்னால், ஊரகப் பகுதிகளில் பணப்புழக்கம் அதிகமாக இந்தத் திட்டம் வழிவகை செய்திருக்கிறது.
ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே – மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் என்கிற விடியல் பயண வசதியை ஏற்படுத்தித் தந்தோம். இதுவும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.
அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள், உயர்கல்விக்காகக் கல்லூரியில் சேர்ந்தால், அவர்களுக்குப் புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டு இருப்பதும் நம்முடைய கழக அரசுதான்.
அனைத்துத் துறையும் வளர வேண்டும் – அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகிறோம். நகர்ப்புறங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது – கிராமப்புறங்களும் வளர்ந்தாக வேண்டும்.
“ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக – தொழில் வளர்ச்சியாக மட்டும் இருக்கக் கூடாது. சமுதாய வளர்ச்சியாக இருக்க வேண்டும்” என்று நான் அடிக்கடி சொல்லி கொண்டு வருகிறேன்.
அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்றால், கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்தாகவேண்டும். இதை மனதில் வைத்துதான் எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வருகிறோம்.
இன்று அக்டோபர் 2, அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள். “இந்தியா- கிராமங்களில் வாழ்கிறது” என்று சொல்லி, ‘கிராம சுயராஜ்ஜியம்’ எனும் கிராம தற்சார்பு நிலையை எல்லா கிராமங்களும் அடைய வேண்டும் என்று விரும்பினார்.
தற்சார்புள்ள கிராமங்கள் – தன்னிறைவு பெற்ற கிராமங்கள் – எல்லா வசதிகளும் கொண்ட கிராமங்கள் – சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள் – ஆகியவற்றை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு எந்நாளும் உழைக்கும், உழைக்கும், உழைக்கும்! இவ்வாறு அவர் கூறினார். 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: