இதில் கோபமடைந்த வூ யென்னி நடுவர்களிடம் முறையிட்டார். பின்பு அவரும் போட்டியில் பங்குகொள்ள அனுமதிக்கப்பட்டனர். போட்டிக்குப் பிறகு தகுதிநீக்கம் பற்றி முடிவெடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. தவறாகத் தொடங்கியது சீன வீராங்கனை வூ யென்னிதான் என்பது தெளிவாக தெரிந்திருந்தபோதும் அவர் மீண்டும் போட்டியில் பங்குபெற அனுமதிக்கப்பட்டது சரியல்ல என இந்திய தடகள கூட்டமைப்பு சார்பாக ஒரு புகார் எழுப்பப்பட்டது. முறைப்படி 100 டாலர் தொகை கட்டணமாகச் செலுத்தப்பட்டு இந்த புகார் (Protest) கொடுக்கப்பட்டது.
இரு வீராங்கனைகளுடனும் போட்டி தொடங்கப்பட்டது. தனக்கேயான பாணியுடன் மெதுவாக தொடங்கிய ஜோதி இறுதி நொடிகளில் வேகமெடுத்து 12.91 விநாடிகளில் எல்லைக்கோட்டை கடந்து மூன்றாவதாக வந்தார். சீன வீராங்கனை வூ யென்னி இரண்டாவதாக வந்தார். முதலிடத்தை மற்றொரு சீன வீராங்கனையான லின் யூவே முதலிடம் பிடித்தார். போட்டிக்குப் பிறகு சுமார் அரைமணி நேரம் வரை வெற்றியாளர்கள் அறிவிக்கப்படவில்லை. அதற்குப் பிறகுதான் வூ யென்னி தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதுவரை தானும் பதக்கம் வென்றதாக தேசிய கொடியுடன் வலம்வந்துகொண்டிருந்தார் அவர். இந்த தகுதிநீக்கம் காரணமாக மூன்றாவதாக வந்த ஜோதி யாராஜி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இது அனைத்தும் நடந்தது பெரும்பாலும் சீன ரசிகர்களால் நிரம்பிவழிந்த 80,000 பேர் அமரக்கூடிய தடகள மைதானத்தில். போட்டிக்குப் பிறகு, நடுவர்களிடம் முறையிட்டது குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை சீன ஊடகங்கள் ஜோதியிடம் முன்வைத்தனர். “எனக்கான நியாயங்களை நான்தான் கேட்க முடியும்!” என்று அவற்றுக்கு நச்சென பதிலளித்தார் ஜோதி யாராஜி.