புதுடெல்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அந்நாட்டு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

லிபரல் கட்சித் தலைவரான ஐஸ்டின் ட்ரூடோ 2015-ம் ஆண்டு முதல் கனடா நாட்டு பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான இப்சோஸ், கனடா மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தியது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 40 சதவீத மக்கள் கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 30 சதவீத மக்களே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். தற்போது பிரதமர் தேர்தல் நடத்தப்பட்டால், கன்சர்வேர்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொலிவர் 40 சதவீத வாக்குகள் பெறுவார் என்று அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், கடந்த 50 ஆண்டுகளில் கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என்று மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். கனடாவில் அடுத்த பிரதமர் தேர்தல் 2025-ம் ஆண்டு நடைபெற உள்ளது.

கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேறஉத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனட அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதையடுத்து கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ட்ரூடோ சீனியர்: 1980-களில் கனடாவில், காலிஸ்தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அங்கே மறைந்திருந்த காலிஸ்தான் தீவிரவாதி தல்விந் தர் சிங் பார்மர் என்பவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு கோரிக்கை விடுத்தது.

இந்தியாவில் போலீஸாரை கொன்ற குற்றச்சாட்டுக் காரணமாக தல்விந்தர் சிங் பார்மரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், பார்மரை இந்தியாவிடம் கனடா ஒப்படைக்கவில்லை. இதே தல்விந்தர் பார்மர் தான் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பான பாபர் கல்சாவின் தலைவராக இருந்தார். இந்த அமைப்பு தான் 1985-ல் அயர்லாந்துக்குச் சென்ற கனிஷ்கா என்ற ஏர் இந்தியா விமானத்தை நடுவானில் வெடிக்கச் செய்தது. இதில் மொத்தம் 329 பேர் உயிரிழந்தனர். அவர்கள் கனடா நாட்டு குடிமக்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியினர். இந்த தீவிரவாத செயலைச் செய்த பார்மரை, பியரி ட்ரூடோ பாதுகாத்தார் என்று அப்போது பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: