ஒட்டாவா: சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில், “இந்தியாவைத் தூண்டிவிடவோ அல்லது பதற்றத்தை அதிகரிக்கவோ பார்க்கவில்லை. ஆனால் இந்தியா இதனை மிகத்தீவிரத்துடன் கையாள வேண்டும்” என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ முன்பு குற்றம் சாட்டியதன் தொடர்ச்சியாக தற்போது இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய ட்ரூடோ, “இந்த விவகாரத்தில் இந்தியாவை நாங்கள் தூண்டிவிடவோ அல்லது இந்தியாவுடனான பதற்றத்தை அதிகரிக்கவோ பார்க்கவில்லை. எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவதற்கும் சரியான செயல்முறைகள் இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் தொடர்பு இருப்பது பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளதை கனேடிய அரசின் ஏஜென்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை கனேடிய அரசு தீவிரமாக பின்பற்றப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. “கனடாவில் நிகழ்ந்த வன்முறைச் செயலுக்கு இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அபத்தமானது. இது உள்நோக்கம் கொண்டது. இதற்கு முன்பே இதே குற்றச்சாட்டுகள் கனடா பிரதமரால் இந்திய பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டன. அப்போதே அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன.

இந்தியாவில் வசிக்கும் கனேடியர்களுக்கு அறிவுறுத்தல்:

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதலைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் வசிக்கும் தனது குடிமக்களுக்கு கனேடிய அரசாங்கம் சில விஷயங்களை அறிவுறுத்தியுள்ளது. கனடா அரசாங்கத்தின் இணையதளத்தில், “பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சில பாதுகாப்புக் கவலைகள் உள்ளன. நிலைமை விரைவாக மாறக்கூடும். எனினும், மிகவும் எச்சரிக்கையாக இருங்கள், உள்ளூர் ஊடகங்களைக் கண்காணித்து உள்ளூர் அதிகாரிகளின் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி: இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இந்திய அரசாங்க முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. ” என்று கூறினார்.

பிரதமரின் பேச்சைத் தொடர்ந்து, பேசிய வெளியுறவு அமைச்சர், “நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம். அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *