சென்னை: ‘சரக்கு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில் பெண் தொகுப்பாளரிடம் நடிகர் கூல் சுரேஷ் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மன்சூர் அலிகான் தயாரித்து, நடிக்கும் படம் ‘சரக்கு’. இப்படத்தை ஜெயக்குமார்.ஜே இயக்குகிறார். அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ். டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுத, எஸ்.தேவராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் கே.பாக்யராஜ்,கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, பழ கருப்பையா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (செப்.19) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். மேடையில் பேச வந்த நடிகர் கூல் சுரேஷ். தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை திடீரென தனக்கு அருகில் நின்றுகொண்டிருந்த பெண் தொகுப்பாளரின் கழுத்தில் அவரது அனுமதியின்றி போட்டார். இதனால் எரிச்சலடைந்த அந்த தொகுப்பாளர் மேடையிலேயே அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கீழே அமர்ந்திருந்த நிருபர்கள் சிலர், கூல் சுரேஷின் செயலை கண்டித்து அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து கூல் சுரேஷை அழைத்த நடிகர் மன்சூர் அலிகான் அவரை பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கச் செய்தார். அதன்பிறகே நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் பலரும் தொடர்ந்து இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு வரும் கூல் சுரேஷை சினிமா தொடர்பான பொதுநிகழ்ச்சிகளில் அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: