பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானைப் படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் கரண் ஜோஹர் உட்பட பலரும் விரும்பினர். ஆனால் நடிக்க மறுத்த ஆர்யன் கான் இயக்குநராக விரும்பி அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார். முதல் கட்டமாக ‘ஸ்டார்டம்’ என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். அந்த வெப்சீரிஸில் தான் கௌரவத் தோற்றத்தில் நடிக்க விரும்புவதாக ஷாருக்கானே தன் மகனிடம் தெளிவாகத் தெரிவித்தார். ஆனால் ஆர்யன் கான் தன் தந்தையின் விருப்பத்தை நிராகரித்துவிட்டார்.

தான் இயக்கும் முதல் சீரிஸில் தன் தந்தை நடித்தால் அது தனிப்பட்ட கவனத்தை ஈர்க்கும். அது போன்ற ஒன்றை ஆர்யன் கான் விரும்பவில்லை. எனவேதான் தன் தந்தை இதில் நடிக்கவேண்டாம் என்று அவர் தெரிவித்துவிட்டார் என்கிறார்கள். ஆனால் மகனின் வெப் சீரிஸ் அதிக அளவில் பேசப்படவேண்டும் என்று ஷாருக்கான் விரும்புகிறார். அதனால்தான் அவரே விருப்பம் தெரிவித்தார் என்றும் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஆர்யன் கான் இயக்கும் வெப்சீரிஸுக்கான வேலை முழு அளவில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் தங்களின் தளத்தில் வெளியிட பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்று தயாராக இருக்கிறது. ரூ.120 கோடி கொடுத்து அந்த வெப்சீரிஸை வாங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் வெப்சீரிஸ் தயாரித்து எடிட்டிங் செய்து முடிக்கப்படும் வரை அதனை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடமாட்டேன் என்று ஆர்யன் கான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதோடு வெப்சீரிஸின் 2, 3, 4, 5வது பகுதியைத் தயாரிக்க அதற்குள் தயாரிப்பாளர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு ஆர்யன் கானைத் தொடர்புகொள்ள ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள திரைப்படக்கல்லூரியில் படித்துள்ள ஆர்யன் கான் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு மும்பையில் இருந்து கோவா சென்ற கப்பலில் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் வரை நண்பர்கள், பார்ட்டி என்று சுற்றிக்கொண்டிருந்த ஆர்யன் கான் ஜாமீனில் வெளியில் வந்த பிறகு வெப் சீரிஸ் இயக்கும் பணியில் முழுமையாக இறங்கிவிட்டார்.