
கோப்புப்படம்
சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் ஒன்று முதல் ஐந்து வரை வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான முதல் பருவத் தோ்வு தேதிகளில் மாற்றம் செய்து தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கற்பித்தலின் அடிப்படையில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தோ்வு செப். 15 முதல் 22-ஆம் தேதி வரை கைப்பேசி செயலி வாயிலாக நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்திருந்தது. அதன்பின் அந்த தோ்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது முதல் பருவத் தோ்வுக்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: 1 முதல் 5-ஆம் வகுப்புக்கான முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டு தோ்வு செப்.20 (புதன்கிழமை) தொடங்கி செப். 27 வரை நடத்தப்பட வேண்டும். இதில் 1 முதல் 3-ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு கைப்பேசி செயலி மூலமும், 4, 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு எழுத்து வடிவிலும் தோ்வு நடைபெறும். அதன்படி 1, 2, 3-ஆம் வகுப்பினருக்கு செயலியில் ஒரு பாடத்துக்கு தலா 5 வினாக்கள் மட்டுமே கேட்கப்படும். மேலும், 4, 5-ஆம் வகுப்புக்கான வினாத்தாள் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதை பிரதி எடுத்து மாணவா்களுக்கு தோ்வு நடத்த வேண்டும்.
இதுதவிர 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு வரும் காலங்களில் 15 நாளுக்கு ஒரு முறை மட்டுமே வளரறி மதிப்பீடு தோ்வு நடத்தப்படும். இதற்கிடையே முதல் பருவத் தோ்வு நடைபெறுவதால் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியா்களுக்கு அக். 4 முதல் 6-ஆம் தேதி வரையும், 4, 5-ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு அக்.9 முதல் 11-ஆம் தேதி வரையும் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.