புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ரயில் பெட்டியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இவ்வழக்கின் குற்றவாளிகள் பற்றி துப்பு அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன? – அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. ராமர் கோயில் பாதுகாப்புக்காக சுற்றுப்புற மாவட்டக் காவல்நிலையங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவராக அயோத்தியின் அருகிலுள்ள மானக்பூர் காவல்நிலையத்தின் 45 வயது தலைமை பெண் காவலரும் இருந்தார். உ.பி.,யின் பிரயாக்ராஜை சேர்ந்த இப்பெண் காவலர், கடந்த ஆகஸ்ட் 30 அன்று மானக்பூரிலிருந்து வந்த சரயு எக்ஸ்பிரஸ் ரயிலில் அயோத்திக்கு வந்துள்ளார். ஆனால் அவர் அயோத்தியில் இறங்கவில்லை.

பயணிகள் இல்லாத காலிப்பெட்டியில் ரத்த வெள்ளத்தில் அடுத்த நாள் அவர் மீட்கப்பட்டார். ரயில் பெட்டியின் இருக்கைக்கு கீழே கிடந்திருந்தவரை, அதில் மறுநாள் ஏறிய பயணிகள் தான் முதலில் கண்டுள்ளனர். இந்தத் தகவலை அறிந்த ரயில்வே போலீஸார் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதற்குள் கோமா நிலையை அடைந்த அப்பெண்ணின் நிலைமை மோசமானது. இதனால், தலைநகரான லக்னோவின் கிங் ஜார்ஜ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ரயில் பெட்டியிலிருந்து மீட்கப்பட்டபோது அவர், அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு அரை நிர்வாணமாக படுகாயத்துடன், எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். அவரது முகம், அடிவயிறு உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் கத்தி குத்துகள் இருந்துள்ளன.

இதற்கிடையில், பெண் காவலரின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் அயோத்தி மாவட்ட ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அவர் மயக்கம் தெளிந்து பேசும் நிலையை பெற்ற பின்தான் சம்பவத்தை விசாரிக்கும் நிலை இருந்தது. இச்சூழலில், அப்பெண் காவலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாகப் பலியாகி உள்ளார். இதனால், அப்பெண் காவலர் கொலை வழக்கு உ.பி.,யின் அதிரடிப்படையான எஸ்ஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிகிச்சையின் போது கோமா நிலையிலேயே அப்பெண் இறந்தமையால், குற்றவாளிகள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக இச்சம்பவம் குறித்து துப்பு அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1998 முதல் உ.பி காவல்துறையில் காவலராக இணைந்து பணிபுரிந்துவந்த அப்பெண் மணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அப்பெண் சிகிச்சை பெற்று வந்தபோது, உ.பி.,யின் உயர் நீதிமன்றம் அவரது வழக்கை செப்டம்பர் 5 இல் தானாக முன் வந்து கண்காணிக்க முடிவு செய்திருந்தது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *