மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பத்தவர்களில் 56.60 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், 30 நாள்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தவிர, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோருக்கென இன்று முதல் உதவி மையம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது விண்ணப்பம் என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்று காரணம் அறிய விரும்பிய நிலையில், மனுதாரர்களின் சந்தேங்களை போக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத் திட்ட உதவி மையங்களில் விவரங்களை அறிந்து கொள்ளலாம். சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் இன்று முதல் உதவி மையம் செயல்படுகிறது.
இதுதவிர, கலைஞர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய தமிழக அரசு சார்பில் பிரத்யேக இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 1000 தொகை கிடைக்காதவர்கள், https://kmut.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக, தங்களது குடும்ப அட்டை எண்ணை பதிவிட்டு, விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.