இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை
19 செப், 2023 – 07:27 IST

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் மீரா, மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக படைப்பாளியாக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், மீரா, லாரா என்ற இரு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் மீரா, சென்னை சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு தனது அறையில் தூங்க சென்றவர், அதிகாலை 3 மணி அளவில் துப்பட்டாவால் பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அவரை வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவேரி மருத்துவமனையில் இருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மீராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
மகளின் இந்த தற்கொலை சம்பவம் விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.