தொடர்ந்து கடந்த 17-ம் தேதி தனது பயணத்தை முடித்துக்கொண்டு வடகொரியாவுக்குத் திரும்பினார், கிம். அப்போது அவருக்கு சில ட்ரோன்கள், அதிநவீன குண்டு துளைக்காத உடைகள் உள்ளிட்டவை பரிசாக அளிக்கப்பட்டன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான இந்த சந்திப்பு, அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதாவது ஐக்கிய நாடுகள் விதித்திருக்கும் பல்வேறு பொருளாதார தடைகளால் உணவு, எரிபொருளுக்கு வடகொரியாவில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மறுபுறம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ராணுவ உதவி செய்து வருவதால், போர் முடிவுக்கு வரவில்லை. இதனால் ரஷ்யாவுக்கு பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. எனவே இருவருக்கும் பொது எதிரியாக அமெரிக்கா இருக்கிறது. இதற்கிடையில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடந்திருக்கும் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.