ஈரோடு: கோபி நந்த கோகுலத்தில் உள்ள பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கும்பாபிஷேக பூஜைகள் நேற்று தொடங்கின.

ஈரோடு மாவட்டம் கோபி, கோடீஸ்வரா நகரில் நந்த கோகுலம் (கோ-சாலை – பசு மடம்) அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சஹஸ்ர நாம பெருமாள், ஸ்ரீ ராதிகா சமேத ஸ்ரீ நந்த கோபால சுவாமி, ஸ்ரீ ருக்மாயி சமேத ஸ்ரீ பாண்டுரங்க சுவாமி ஆகிய சுவாமிக்கு அஷ்டபந்தன மஹா ப்ரதிஷ்டாபன மகா ஸம்ப்ரோஷணம் (மகா கும்பாபிஷேகம்) செப். 3-ம் தேதி நடக்கிறது. இதற்கான பூஜைகள் நேற்று தொடங்கின.

காலை 8 மணிக்கு தீர்த்தக் கலசங்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து பவானி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர்.

கோ சாலையில் கலசங்கள் வைக்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை மற்றும் புண்யாஹவாசனம் நடந்தது. மாலை 5 மணிக்கு சிறப்பு கோ பூஜை, ஸ்ரீ கன்யா பூஜை, திருவிளக்கு பூஜை மற்றும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லட்சுமி சஹஸ்ரநாம பாராயணம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. முதல் கால யாக பூஜை இன்று (31-ம் தேதி) தொடங்குகிறது.

கும்பாபிஷேகம் குறித்து நந்தகோகுலம் நிர்வாகிகள் கூறியதாவது: கோபி கோடீஸ்வரா நகரில் தட்ஷிண பிருந்தாவனம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு, 4 பசுமாடுகளுடன் தொடங்கப்பட்ட நந்தகோகுலம் கோசாலையில், தற்போது, 110 பசுக்கள் பராமரிக்கப்படுகிறது. கோபியில் உள்ள கோயிலில் இருந்து சுவாமிகள், கலசங்கள், ‘கலா கர்ஷனம்’ செய்து இன்று (31-ம் தேதி) புதிய ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

முதல் கால பூஜையைத் தொடர்ந்து, சுவாமி கர்ப்பக்கிரகத்திற்கு கீழே 20 அடி ஆழத்தில் பேழை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அங்கு 3 கோடி ராம நாமம் எழுதிய புத்தகம் வைக்கப்படவுள்ளது. 106 திவ்ய தேசங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட திருமண் மற்றும் 40 சாலக்கிராமங்களைக் கொண்டு சுவாமிகள் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது, என்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: