தைபே, கடந்த, 24 மணி நேரத்தில் சீனாவின், 103 போர் விமானங்கள் மற்றும் கப்பல்கள் தைவானை சூழ்ந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில், 1949ல் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின், கிழக்கு ஆசிய தீவு நாடாக தைவான் உருவானது. ஆனாலும், தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையிலான சீன அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது.

‘அவசியம் ஏற்பட்டால், தைவானைக் கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம்’ என, சீனா எச்சரித்து வருகிறது. இதற்கேற்றாற்போல், தைவானின் வான் மற்றும் கடல் எல்லைகளில் போர் விமானங்கள், கப்பல்களை அனுப்பி மிரட்டுவதையும் சீனா வழக்கமாக வைத்துள்ளது.

தைவானுடன் வேறு எந்த நாடும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக் கொள்வதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவானை தனி நாடாக செயல்பட விட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மீண்டும் போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை அனுப்பி தைவானை மிரட்டும் செயலில் சீனா ஈடுபட்டுள்ளது.

இது குறித்து தைவானின் ராணுவ அமைச்சகம் கூறியதாவது:

கடந்த, 24 மணி நேரத்தில் தைவானின் வான் எல்லையில் சீனாவின், 103 போர் விமானங்கள் பறந்தன. சமீபகாலமாக, இது போன்ற அதிக எண்ணிக்கையில் சீன விமானங்கள் தைவானுக்கு வந்ததில்லை.

அதேபோல், ஒரே நாளில் தைவானின் கடற்பகுதிக்கு சீனாவின் ஒன்பது கடற்படை கப்பல்கள் வந்து சென்றுள்ளன. பீஜிங் அதிகாரிகள் இதற்கு பொறுப்பேற்பதுடன், மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த வாரம், விமானம் தாங்கிக் கப்பலான ஷான்டாங் உட்பட ஏராளமான கப்பல்களை தைவான் கடலுக்குள் அருகே சீனா அனுப்பிய நிலையில், மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது, தைவானில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் தைவானில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதை திசைதிருப்பும் முயற்சியில் இதுபோன்ற நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *