இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, உலகின் மிக விலையுயர்ந்த நாணயத்தை கிழக்கிந்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதிகாரத்தின் உச்சமாகவும் அரச நெறிமுறைக்கான எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து மறைந்தவர் இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத். உலக வரலாற்றில், இரண்டாவது அதிக நாட்கள் ஆட்சி புரிந்தவர் என்ற பெருமையை பெற்ற எலிசபெத். கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி மறைந்தார்.
அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அதனை சிறப்பானதாக்கும் வகையில் நாணயம் ஒன்றை கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுமார் 300 ஆண்டுகள் இந்தியாவில் கோலாச்சிய கிழக்கிந்திய கம்பெனி, 1874 ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட நிலையில், அதன் பெயருக்கான உரிமையை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சஞ்சீவ் மேத்தா வாங்கி உள்ளார்.
அந்த பெயரில் சஞ்சீவ் மேத்தா விலையுயர்ந்த கலைப்பொருட்களை உருவாக்கி வருகிறார். அவர் இரண்டாம் எலிசபெத்தின் நினைவாக “தி கிரவுன்” என்றழைக்கப்படும் நாணயத்தை அறிமுகம் செய்துள்ளார்.
சுமார் 4 கிலோ தங்கத்தை கொண்டு 6 ஆயிரத்து 426 வைரங்களை கொண்ட இந்த நாணயம், 24.5 செமீ விட்டம் கொண்டது. கலைஞர்களின் 16 மாத உழைப்பிற்கு பரிசாக கிடைத்துள்ள இந்த நாணயத்தின் மொத்த மதிப்பு இந்திய மதிப்பில் 192 கோடி ரூபாய் ஆகும்.
நாணயம் முழுவதும், 2 ஆம் எலிசபெத்தின் உருவங்கள், அவரின் வார்த்தைகள், அவர் பயன்படுத்திய மகுடங்கள் ஆகியவை மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நாணயம், இங்கிலாந்து ராணியின் மாட்சிமைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீடித்த பாரம்பரியமாக விளங்கும் என சஞ்சீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், 2021 ஆம் ஆண்டு சோத்பீஸ் நியூயார்க் (Sotheby’s New York) ஏலத்தில் 157 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட அரிய 1933 US டபுள் ஈகிள் நாணயம், உலகின் மிக விலையுயர்ந்த நாணயத்திற்கான கின்னஸ் சாதனையை படைத்திருந்தது. அதனை இந்த நாணயம் முறியடித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.