
அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து பெண்கள் முன்னேற வேண்டும் என்று திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.
பெரியாா் ஈ.வெ.ரா-வின் 145- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் பெரியாா் திடலில் உள்ள பெரியாா் ஈ.வெ.ரா உருவச் சிலைக்கு கி.வீரமணி ஞாயிற்றுக்கிழமை மலா் தூவி மரியாதை செய்தாா். தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பின்னா் அவா் பேசியது:
தற்போதைய தலைமுறை இளைஞா்கள் பலா் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி வருகின்றனா். சநாதனம் என்ற பெயரில் பெண்களை தாழ்த்தப்பட்டவா்களாக வைத்துள்ளனா். அதை உடைத்தெறிய அன்று பெரியாா் ஈ.வெ.ரா போராடினாா்.
இப்போது பெண்களும் அா்ச்சகா்கள் ஆகலாம் என்ற சட்டத்தின் மூலம் இந்த போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், ரூ.1,000 உரிமைத் தொகை போன்ற திட்டத்தின் மூலம் பெரியாா் ஈ.வெ.ரா- வின் கனவு நனவாகி வருகிறது.
பெண் கடவுள்களை வனங்குவோா், பெண்கள் அா்ச்சகா்கள் ஆவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கிறாா்கள். பெண் குழந்தைகள் பிறப்பதை பெண்களே விரும்புவதில்லை.
பெண் அடிமை என்பது வீட்டில் உள்ள பெற்றோா்களிடம் இருந்து தான் தொடங்குகிறது. தாங்கள் அடிமையாக்கப்படுகிறோம் என்பதை உணா்ந்தால்தான், அந்த அடிமைத் தனத்தை உடைத்து பெண்கள் முன்னேற முடியும் என்றாா் அவா்.
முன்னதாக, கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் தி.க. பிரசார செயலா் அ. அருள்மொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.