நாமக்கல்: சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து துரித உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள துரித உணவகங்களில் சவர்மா கிரில் சிக்கன் உள்ளிட்டவை சமைக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் துரித உணவகத்தில் கடந்த 16ம் தேதி இரவு சவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட இறைச்சி உணவுகளை சாப்பிட்ட நாமக்கல் ஏ எஸ் பேட்டையை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14) என்பவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது தாயார் சுஜாதா, மாமா அத்தை மற்றும் தம்பி உள்ளிட்ட நான்கு பேரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

தொடர்ந்து நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் ச. உமா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: “நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள துரித உணவகத்தில் உணவு சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவ மாணவியர் 11 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது அவர்களுக்கு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் அனைவரும் உடல் நலத்துடன் உள்ளனர். இச்சூழலில் இன்று காலை 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்டதில் சம்பந்தப்பட்ட துரித உணவகத்தில் அவர் சவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட இறைச்சி உணவுகளை சாப்பிட்டது தெரியவந்தது. சிறுமி இறந்தது உண்மைதான். அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் துரித உணவகத்தில் இருந்த இறைச்சி உணவு வகைகள் மற்றும் அந்த உணவகத்திற்கு இறைச்சி வழங்கும் கடையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது தொடர்ந்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதனிடையே அந்த துரித உணவகத்தில் உணவு சாப்பிட்ட 43 பேர் நாமக்கல் மற்றும் திருச்சியில் உள்ள அரசு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட நபர்கள். முழுவதுமாக உடல் நலம் தேறிய பின் தான் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள துரித உணவுகளில் சவர்மா மற்றும் கிரில் சிக்கன் விற்பனை செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சபர்மா, கிரில் சிக்கன் தயாரித்து விற்பனை செய்த துரித உணவகத்தின் உரிமையாளரான நாமக்கல் சிலுவம்பட்டியை சேர்ந்த நவீன்குமார் மற்றும் அந்த உணவகத்தில் பணிபுரிந்து வந்த சமையலர்களான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் மகதூர் மற்றும் தபாஸ் குமார் ஆகிய மூவரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே மாவட்டம் முழுவதும் உள்ள துரித உணவுகளில் உணவு பாதுகாப்பு தர நிர்ணயத்தின்படி உணவுகள் தயாரிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் போட்டியின் போது நாமக்கல் எம்.எல்.ஏ பெ.ராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: