சிராஜின் மிரட்டலான பந்துவீச்சால் கண் இமைக்கும் வேளையில் மிக சுலபமாக ஆசியக்கோப்பையை இந்தியஅணி வென்றிருக்கிறது.

அதிக முறை ஆசியக்கோப்பையை கைப்பற்றிய இந்தியாவின் சாதனையை நடப்பு சாம்பியனான இலங்கை நேர் செய்யுமா அல்லது ஆசியாவின் கிரிக்கெட் சாம்ராஜ்யம் தன்னுடையது தான் என இந்தியா ஆதிக்கம் செலுத்துமா என்ற கேள்வியோடு ஆரம்பித்த இறுதிப் போட்டி சீறிய சிராஜின் ஸ்பெல்லினால் இந்தியாவை சாம்பியனாக்கி அழகு பார்த்திருக்கிறது.

Siraj | சிராஜ்

கடந்த சில வருடங்களாகவே ஸ்பின்னர்களின் சொர்க்கபுரியாகவே திகழும் கொழும்பு மைதானத்தில் நடப்பு ஆசியக்கோப்பை தொடரிலும் 49 சதவிகிதம் விக்கெட்டுகளை சுழல் பந்து வீச்சாளர்களே கைப்பற்றி இருந்தனர். எனவே குல்தீப், வெல்லாலகே என இரு பக்கமுமே அவர்களே கோலோச்சுவர் என்பதுவே அனுமானமாக இருக்க அதை முற்றிலும் மாற்றியது சிராஜின் சண்டே ஸ்பெஷல் ஷோ.

ரெட்பாலுக்கே உரியவர் என விமர்சிக்கப்பட்டு வந்த சிராஜின் இன்னொரு பரிமாணத்தை ஆர்சிபி சார்பாக ஐபிஎல்லில் ஆடிய போது அவரது அற்புத ஸ்பெல்லான 3/8 வெளிக் கொணர்ந்தது. புறக்கணிக்க முடியாதவராக அங்கிருந்துதான் அவரது வளர்ச்சி அபரிவிதமானதாக மாறியது. அதிலும் பும்ரா இல்லாத நிலையில் ஒருநாள் போட்டிகளிலும் தன்னை சிராஜ் மேம்படுத்திக் கொண்டே வந்தார். அதன் உச்ச கட்டத்தை ஆசியக்கோப்பையின் இறுதிப் போட்டி கண்டுள்ளது. 2008-ல் மெண்டீஸ் எனும் சுழலும் சுனாமி எப்படி இந்தியாவினை மூழ்கடித்ததோ அதே போன்றதொரு சூறாவளியாகி சிராஜ் இலங்கையை எழவே விடாது வீழ்த்தினார்.

Siraj

ஓப்பனிங் ஓவரில் பும்ராவின் இன்ஸ்விங் யார்க்கரிலும் அவுட் ஸ்விங்கர்களிலும் திகைத்து மீளும் முன்பே சிராஜின் முதல் ஓவர் அற்புத அவுட் ஸ்விங்கர்களாலும் டாட் பால்களாலும் இலங்கை பேட்ஸ்மேன்களை மெய்டனோடு வரவேற்றது. இன் ஸ்விங்கர் நிலைகுலையச் செய்து பேட்டையோ, ஸ்டம்பினையோ பதம் பார்க்கும். அவுட் ஸ்விங்கர்கள் பேட்ஸ்மேனை டிரைவ் செய்யத் தூண்டி அவுட்சைட் எட்ஜ் வாங்க வைத்து காவு வாங்கும்.

அதிலும் டெஸ்ட் போட்டி போன்ற அட்டாக்கிங் ஃபீல்டிங் செட்டப்பில் மூன்று ஸ்லிப்கள் ஆளை விழுங்கும் புதைகுழிகளாகக் காத்திருக்கையில் பவர்பிளேயிலும் பொறுமை அவசியம். ஆடிய எந்த இலங்கை பேட்ஸ்மேனுக்கும் அது நினைவிலும் இல்லை. யோசிப்பதற்கான அவகாசத்தையும் சிராஜ் தரவில்லை.

Siraj

சுற்றிலும் கொழுந்து விட்டு எரியும் தீயில், மூச்சு விட முடியாதபடி மாட்டிக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது கை கால்களை நீட்டி ஆட இடமோ அவகாசமோ அளிக்காத சிராஜின் பந்துகளும்.

அவர் வீசவந்த இரண்டாவது ஓவரின் முதல் பந்தே நிஸாங்காவினை வெளியேற்றி தொடங்கியது. சற்றே நிதானிக்கும் முன்பு அடுத்தாக ஸமரவிக்ரமாவினை சிராஜின் இன்ஸ்விங்கர் பழிதீர்த்தது. லைனை சற்றே மாற்றி மிடில் ஸ்டம்ப்பில் சிராஜ் வீச டைமிங் மிஸ் செய்த ஸமரவிக்ரமா அதனை தவறான லைனில் ஆட பந்து அதிவேகமாக பேடினைப் பதம் பார்த்தது. அசலங்காவோ நான்காவது ஸ்டம்பில் நகர்ந்த பந்தினை டிரைவ் செய்ய முயன்று இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பினை சிராஜுக்குக் கொடுத்தார். அதனை தனஞ்செயா பவுண்டரி மூலமாக அழித்தாலும் எல்லா கோட்டையும் திரும்பவும் போடுங்கள் என்பது போல் சிராஜின் அவுட் ஸ்விங்கர் தனஞ்செயாவினையும் தாமதமின்றி வீழ்த்தியது.

Siraj

ஸ்பின்னர்கள் வந்து வெற்றியை முடிவு செய்ய காத்திருக்கப் பொறுமையில்லாத சிராஜின் ஸ்விங்கர்கள் உள்ளே வெளியே என மாறி மாறிப் பயணித்து வீசிய அந்த ஒரே ஒரு ஓவரிலே நான்கு விக்கெட்டுகளை சரித்து போட்டியின் போக்கையே மாற்றியது, சிராஜ் மாற்ற வைத்தார். மீண்டுமொரு மெய்டன் ஓவரோடு பும்ரா சிறப்பிக்க தனது மூன்றாவது ஓவரில் ஷனகாவினை வெளியேற்றி ஐந்து விக்கெட்டுகளோடு கர்ஜித்தார் சிராஜ். முந்தைய பந்துகளை எல்லாம் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிவிட்டு நான்காவது பந்தினை லைனை மாற்றி மிடில் ஸ்டம்பை சந்திக்க அனுப்ப அது ஏமாற்றாமல் ஸ்டம்போடு கைகுலுக்கி அதனை சிதறச் செய்தது. வெறும் 16 பந்துகளிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ( வெறும் நான்கு ரன்களை மட்டுமே கொடுத்து) புதியதொரு சாதனையை சிராஜ் நிகழ்த்தியிருந்தார்.

அதே ரிதத்தில் மீதமுள்ள விக்கெட்டுகளையும் ஒருகை பார்ப்பார் அதோடு ஏழு விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் நிகழ்த்துவார் என்ற நம்பிக்கையில் ரோஹித் பவர்பிளேயோடு நிறுத்தாமல் மேலும் ஒரு ஓவரை சிராஜுக்கே கொடுக்க ஒரு இன்ஸ்விங்கரால் மெண்டீஸின் விக்கெட்டை வீழ்த்தி ஆறு விக்கெட்டுகளோடு ஒட்டுமொத்த இலங்கையின் பேட்டிங் யூனிட்டையும் வெட்டி சாய்த்திருந்தார் சிராஜ்.

2008-ல் மெண்டீஸால் ஏற்பட்ட காயத்தின் வடுவினை இந்த மெண்டீஸின் விக்கெட்டை ஆறாவதாக வீழ்த்தி சற்றே ஆறச் செய்தது சிராஜின் தீரம். ஒருகட்டத்தில் ஒருநாள் போட்டிகளில் 43 ரன்களை மட்டுமே எடுத்த இலங்கையின் முந்தைய மோசமான சாதனையையும் முறியடிக்கும் பயத்தை எல்லாம் சிராஜின் ஸ்பெல் அவர்களுக்குக் காட்டியது.

அசலங்கா மற்றும் தனஞ்செயா ஆட்டமிழந்த விதங்களில் மட்டும் வேண்டுமென்றால் பேட்ஸ்மேன்களைக் குறை கூறலாம். மற்ற எல்லோரது விக்கெட்டுகளும் சிராஜின் பௌலிங் திறத்தினாலேயே செதுக்கப்பட்டிருந்தது. மனதளவிலும் எதிர்கொள்ள முடியாத பயத்தை அவை உண்டாக்கிவிட்டன. விளைவு அவரது ஒற்றை ஸ்பெல் கோப்பையை இந்தியாவின் பெயரில் பதிவு செய்து விட்டது. பும்ராவுக்கு அடுத்த கட்ட பௌலர் என்ற நிலையிலிருந்து மெல்ல மெல்ல அவருக்கு இணையானவர் என்ற நிலையை சிராஜ் எட்டத் தொடங்கி இருக்கிறார்.

Siraj

வீசிய 14 பந்துகளில் 3/3 என சிறப்பித்து ஹர்திக் பாண்டியாவும் டெய்ல் எண்டர்களை முடித்து வைத்து 50 ரன்களுக்குள் இலங்கையை சுருட்டினார். 6.1 ஓவர்களுக்குள் விக்கெட் எதையும் இழக்காமல் அதனை சேஸ் செய்து கனகச்சிதமான ஃபைனல் டச்சினையும் இந்தியா கொடுத்து ஆசிய கோப்பையினை மீண்டுமொரு முறை கையில் ஏந்தியது.

கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் சோபிக்காமல் போனது வீழ்ச்சியின் தொடக்கம். அதன் பின்பு பல சரிவுகளையும் இந்திய அணி சந்தித்து வந்தது. உலக கோப்பையில் ஏமாற்றம், வீரர்கள் காயம், சோதனை முயற்சிகள் என பல குழப்பங்களோடே வலம் வந்தது. ஆனால் இம்முறை எல்லாமே திட்டமிட்டபடி நகர்ந்து கோப்பையை வெல்ல வைத்துள்ளது.

Team India

இது தந்துள்ள உற்சாகமும் நம்பிக்கையும் அடுத்த மிகப்பெரிய இலக்கான உலக கோப்பையை நோக்கி இன்னமும் வேகமாக இந்திய அணியை உந்தித் தள்ளும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: