ஆனால், கதைக்காகவா நாம் ‘மிஷன் இம்பாஸிபிள்’ ரக படங்களை பார்க்கப்போகிறோம். விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள்தான் இந்தப் படங்களின் அடிநாதமே! அதில் இம்முறையும் எந்தக் குறையும் வைக்கவில்லை இயக்குநர் கிறிஸ்டோபர் மேக்குவரி. ‘மிஷன் இம்பாஸிபிள்’ படத்தின் கடந்த இரண்டு பாகங்களை இயக்கியவரும் இவர்தான். கதையோட்டத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சரியான வெளி அமைத்து, அது ஓவர்டோஸ் ஆகிவிடாமல் நம்மை இருக்கை நுனியிலேயே வைத்திருப்பதில் வெற்றிகாண்கிறார். படத்தில் ஈத்தன் ஹன்ட்டின் மிஷன் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு படத்திலும் முந்தைய பாகத்தை விட மிரளவைக்கும் ஸ்டண்ட்களைச் செய்துவிட வேண்டும் என்பதே டாம் க்ரூஸின் மிஷனாக இருக்கிறது.

ஏற்கெனவே வைரலான மலையிலிருந்து பைக்கில் நிஜமாகவே அவர் குதிக்கும் ஸ்டண்ட், படத்தில் வரும் இடமும் அதன் காட்சியமைப்பும் மிகச்சிறப்பு. இது அல்லாமல், ரோம் தெருக்களில் நடக்கும் கார் சேஸ், அபுதாபி விமான நிலையத்தில் நடக்கும் ‘கேட் அண்ட் மௌஸ்’ ரக தேடுதல் காட்சிகள், வெனீஸ் நகரில் நடக்கும் சண்டைக்காட்சிகள் எனக் குறிப்பிட்டு சொல்ல ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன.