ஹங்கேரி தலைநகரமான புடாபெஸ்ட் நகரில் நடந்துவரும் உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆசிய சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஹீட் சுற்றில் ஓடிய அமோஜ் ஜேக்கப், முகம்மது அனாஸ், முகம்மது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் அடங்கிய நால்வர் அணி 2:59.05 என்ற நேரத்தில் பந்தயத்தை முடித்து ஜப்பான் அணி வசமிருந்த ஆசிய ரெக்கார்டை(2.59.51) முறியடித்திருக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஓரிகன் நகரில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்த சாதனையை படைத்திருந்தது ஜப்பான். இத்துடன் அமோஜ் ஜேக்கப், முகம்மது அனாஸ், நோவா நிர்மல் டாம், ஆரோக்கிய ராஜிவ் டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்திருந்த 3:00.25 என்ற தேசிய சாதனையையும் முறியடித்திருக்கிறது இந்த அணி.
இறுதிசுற்றுக்குத் தகுதிபெற்றிருக்கும் இந்தியா மொத்தமாக ஹீட் சுற்று முடிவில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. தடகள போட்டிகளில் பதக்கங்களைக் குவிக்கும் ஜமைக்கா, கென்யா போன்ற நாடுகளையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது இந்தியா.