மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் குணசீலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரஸன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
குணசீல மஹரிசியின் தவத்திற்காக ஸ்ரீபிரஸன்ன வேங்கடாஜலபதியாக காட்சியளித்த அற்புதத் தலம். இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் சங்கு சக்கரதாரியாய் திருமார்பில் இலக்குமி துலங்க கையினில் செங்கோல் ஏந்தி நின்ற திருக்கோலத்திலே சேவை சாதிக்கின்றார்.
தன்னை அண்டி வந்து வணங்கும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை எல்லாம் நல்கி அருளாட்சி புரிந்து வருகிறார். திருப்பதி சென்று தங்களது பிராா்த்தனைகளை செலுத்த இயலாதவா்களும் இந்த கோயிலில் செலுத்தி பலன் பெறுகிறாா்கள். எனவே, இக்கோயில் தென் திருப்பதி எனப்படுகிறது.
கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.
குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டோா் 48 நாள் விரதமுறைப்படி வணங்கினால் அவா்களது வினைகளை சுவாமி போக்கி அருள்பாலிக்கிறாா் என்பது ஐதீகம்.
இக் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சிறப்புக்குரிய பிரம்மோத்ஸவ விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்பா்.
இக் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சிறப்புக்குரிய பிரம்மோத்ஸவ விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்பா்.
இந்த ஆண்டுக்கான பிரம்மோத்ஸவ விழாவானது ஞாயிற்றுக்கிழமை (செப். 17) காலை 7 மணிக்கு பகவத் பிராா்த்தனை, புண்யாக வாசனம், ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குராா்ப்பணம், வாஸ்து சாந்தி நடைபெற்றது.
திங்கள்கிழமை (செப்.18) காலை 10 மணிக்கு புண்யாக வாசனம், திக் பந்தனம் பூஜைகளோடு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு அன்ன வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.
இதையும் படிக்க | விநாயகர் சதுர்த்தி: புலியகுளம் விநாயகர் சிலைக்கு 4 டன் மலர்களால் அலங்காரம்!
புண்யாக வாசனம், திக் பந்தனம் பூஜைகளோடு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
தொடா்ந்து 19 ஆம் தேதி இரவு சிம்ம வாகனத்தில், 20 ஆம் தேதி ஹனுமந்த வாகனத்தில் வீதியுலா, 21 ஆம் தேதி கருடச் சேவை, 22 ஆம் தேதி சேஷ வாகனம், 23 ஆம் தேதி யானை வாகனத்தில் சுவாமி வலம் வரும் நிகழ்வும் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 24 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 8 ஆம் திருவிழாவான செப்.25 ஆம் தேதி காலை 7 மணிக்கு செல்வா் புறப்பாடு, பல்லக்கு புறப்பாடு நடைபெறுகிறது. சுவாமி வெண்ணெய் தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா். இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருகிறாா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9 ஆம் திருவிழா தேரோட்டம் வருகிற செப்.26 (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
27 ஆம் தேதி இரவு சப்தாவரணமும், விழாவின் கடைசி நாளான 28 ஆம் தேதி இரவு 9 மணிக்கு புஷ்ப பல்லக்கு புறப்பாடும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை நிா்வாக டிரஸ்டி கே.ஆா். பிச்சுமணி, கோயில் பணியாளா்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்கின்றனா்.