சேலம்: சேலத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினரும் ஒன்று கூடி 29ம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினர்.

சேலம் பொன்னம்மாப்பேட்டை தம்பி காளியம்மன் கோயில் தெருவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒரே பகுதியில் ஒற்றுமையாக பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அங்கு ஓம் சக்தி நண்பர்கள் குழு சார்பில் ஆண்டுதோறும் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது வழக்கம்.

இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவது வழக்கம். கடந்த 28 ஆண்டுகளாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 29ம் ஆண்டாக ஓம் சக்தி நண்பர்கள் குழு சார்பில் இந்த ஆண்டு சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிறப்பு அலங்காரமாக சிவ விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அலங்கார பந்தலில் சிலுவை, ஓம், 786 ஆகிய மும்மத சின்னங்களும் மின் விளக்கு ஒளியில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. ஒலி பெருக்கியில் விநாயகர் பக்தி பாடல், இஸ்லாமிய பக்தி பாடல், கிறிஸ்தவ பக்தி பாடல்கள் மாற்றி மாற்றி ஒலிபரப்பப்பட்டு கொண்டுள்ளன. இந்த பகுதியில் உள்ள அனைத்து மதத்தினரும் வந்து விநாயகரை வழிபட்டு செல்கின்றனர்.

சிறப்பு பூஜைகள் தீப ஆராதனைகளுக்கு பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவில் மத மோதல்கள் போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் சேலத்தில் மும்மத மக்களும் ஒன்று கூடி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: