சொந்த மண்ணில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் , ஆடும் லெவனில் இடம் பெறப்போவது யார் யார் என்பதை தீர்மானிக்கும் பெரிய பணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் உள்ளது.

15 வீரர்களில் 11 பேரை தேர்வு செய்வது என்ன அவ்வளவு பெரிய கஷ்டமா என்றால், தற்போதைய சூழலில் பெரிய தலைவலியே அதுதான். குறிப்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடப் போவது கிளாசிக்.எல்.ராகுலா? அல்லது இளம் இஷான் கிஷனா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. ஒருவேளை இருவரும் இடம் பெற வாய்ப்பு உள்ளதா? அப்படியானால் ஸ்ரேயாஸ் ஐயர் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் எழுகிறது.

கே.எல்.ராகுலுக்கு கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. தொடக்க வீரர், மத்திய வரிசை வீரர் என எந்த இடத்திலும் இறங்கி, அதிரடியாக ரன் குவிக்கக்கூடியவர் . எனினும் காயத்தால் அவதிப்பட்ட கே.எல்.ராகுல் கடைசியாக சர்வதேச போட்டிகளில் களமிறங்கி கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டது. தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும், லீக் சுற்றுப் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. பேட்டிங் செய்வதோடு அவரது பணி நிறைவடைவதில்லை. 50 ஓவர்கள் முழுவதும் கீப்பிங் செய்ய வேண்டும். அதற்கு 100 சதவிகித உடல்தகுதி அவசியம். இதனையும் அணி நிர்வாகம் கவனத்தில் கொள்ளும்.

இதையும் படிங்க : உலகக் கோப்பை இந்திய அணி: தேய்கிறதா தெற்கு?

காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து இலங்கை சென்றுள்ள ராகுல், ஆசியக் கோப்பை சூப்பர்4 சுற்றில் களம் காண ஆயத்தமாகிவிட்டார். ஆசியக் கோப்பையிலும், , அடுத்த நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அசத்திவிட்டால், கே.எல்.ராகுல் தனக்கான இடத்தினை உறுதி செய்துவிடுவார்.நேர்த்தியான ஷாட்கள் விளையாடுவதில் பெயர்பெற்ற கே.எல்.ராகுலுக்கு , போட்டியாளராக உருவெடுத்துள்ளார் இளம் வீரர் இஷான் கிஷன். இளம் கன்று பயமறியாது என்பது போல அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் பார்வையையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார்.

ராகுல் போன்று இவரும் தொடக்க வீரராகவே அதிகம் களமிறங்கியுள்ளார். இருந்தபோதிலும் 5ஆவது வரிசை வரை எந்த இடத்திலும் தன்னால் பேட் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார். ஒருவேளை ராகுலின் காயம் முழுமையாக குணமடையாவிட்டால், அவருக்குப் பதில் 5ஆவது வரிசையில் பேட்டிங் செய்ய இஷான் கிஷனால் இயலுமா என பாகிஸ்தான் உடனான சமீபத்திய போட்டியில் சோதித்துப் பார்த்தது இந்திய அணி. அந்தப் போட்டி இளம் வீரருக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கே சோதனையாக மாறியது. ஆம் 66 ரன்கள் எடுப்பதற்குள் முதல் 4 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறிய அணியை, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுடன் கைகோர்த்து சரிவில் இருந்து மீட்டார் இஷான் கிஷன்.

இதையும் படிங்க :  ஆஃப் ஸ்பின்னர்கள் ஆப்சென்ட்.. பேட்டிங் ஸ்ட்ராங்க்.. உலகக்கோப்பை-க்கு இந்தப் படை போதுமா?

தற்போது உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் நிறைந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக நெருக்கடியாக நேரத்திலும், எவ்வித பதட்டமும் இன்றி பவுண்டரிகளை தெறிக்கவிட்டார். கே.எல்.ராகுல் போன்று தன்னாலும், எந்த வரிசையிலும் களமிறங்கி சாதிக்க முடியும் என நிரூபித்துவிட்டார் இளம் நாயகன் இஷான் கிஷன். ரிஷப் பந்த் போன்று இடது கை பேட்ஸ்மேன் என்பது இஷானுக்கு கூடுதல் பலம்.

2021ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இஷான் கிஷன், ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 19 போட்டிளில் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி இரட்டை சதம் விளாசினார். மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 அரைசதம், பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் என தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் விளாசி அசுர ஃபார்மில் இருக்கிறார்.

இந்திய அணியின் வெற்றிக்கு பல நேரங்களில் பக்க பலமாக இருந்த கே.எல்.ராகுலின் சாதனையை எளிதில் மறக்கமுடியாது. அவர் 54 போட்டிகளில் 1,986 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 5 சதங்களும், 13 அரைசதங்களும் அடங்கும்.பெயரை பார்க்காமல் நல்ல ஃபார்மில் இருப்பவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மாறாக ராகுலுக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைஃப் கூறியிருக்கிறார். முன்னாள் வீரர்கள் பலரும் பிளேயிங் லெவன் பற்றிய தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். எது எப்படியோ, ஒரு இடத்திற்கு இரண்டு வீரர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லதே. ஒருவேளை பிளேயிங் லெவனில் ராகுல், இஷான் இடம் பெறும்பட்சத்தில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆடுவது ஐயமே.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: