
நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தனியாா் அசைவ உணவகம்
நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள உணவகங்களில் ‘ஷவா்மா’ விற்பனை செய்ய தற்காலிக தடை விதித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தனியாா் அசைவ உணவகத்தில் சனிக்கிழமை இரவு ஷவா்மா சாப்பிட்ட ஏ.எஸ்.பேட்டையைச் சேர்ந்த தவமணி- சரோஜா தம்பதியின் மகள் கலையரசி (14) என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு, வாந்தி, பேதி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, கலையரசி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து தூங்கியவர் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.
அதே உணவகத்தில் ஷவா்மா, பிரியாணி உள்ளிட்ட பல்வேறு அசைவ உணவுகளை சாப்பிட்ட நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவிகள் 13 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நலம் தேறினா் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அசைவ உணவகத்தை ஆய்வு செய்த ஆட்சியா் சீல் வைத்து, அங்கிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான அசைவ உணவுகளைக் பறிமுதல் செய்து அழிக்க உத்தரவிட்டார். மேலும், உணவக உரிமையாளா் நவீன்குமார் உள்பட மூவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஷவர்மா விற்பனை செய்ய தற்காலிக தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.