இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்த ஆசியக்கோப்பைத் தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடியிருந்தது. இறுதிப்போட்டியில் இலங்கை அணியை மிக எளிதாக வீழ்த்தி இந்திய அணி ஆசியக்கோப்பையை 8 வது முறையாக வென்றிருந்தது.
இந்நிலையில், அடுத்து வரவிருக்கும் உலகக்கோப்பைத் தொடருக்காக தமிழக வீரரான அஷ்வினிடமும் பேசி வருவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியிருக்கிறார்.

ஆசியக்கோப்பையில் விளையாடும் அதே இந்திய அணி அப்படியேத்தான் உலகக்கோப்பைக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை என இரண்டு அணிகளிலுமே அக்சர் படேல் மிக முக்கிய வீரராக இடம்பெற்றிருந்தார். இந்நிலையில்தான் , ஆசியக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்பாக அக்சர் படேல் காயமடைந்தார். இதனால் அவரால் இறுதிப்போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக அக்சருக்கு பதிலாக மாற்று வீரராக தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தார்கள். இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியின் ப்ளேயிங் லெவனிலும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்திருந்தார்.
இலங்கையை வீழ்த்தி இந்தியா வென்ற பிறகு ரோஹித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அக்சர் படேலின் காயம் பற்றியும் அவருக்கான மாற்று வீரர் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய ரோஹித், ‘அக்சர் படேலுக்கு கடைசி நிமிடத்தில்தான் காயம் ஏற்பட்டது. ஆசியப் போட்டிகளுக்கான முகாமில் இருந்ததால் வாஷிங்டன் சுந்தர் ஏற்கெனவே ஆடுவதற்கு தயாராகத்தான் இருந்தார். அதனால்தான் அவரை அழைத்து அணியில் இடம் கொடுத்தோம்.
ஒரு ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டராக அஷ்வினையும் எங்களுடைய திட்டங்களில் வைத்திருக்கிறோம். நானும் அவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.’ என ரோஹித் சர்மா கூறியிருக்கிறார்.

அக்சர் படேல் காயத்திலிருந்து மீள இன்னும் 7-8 நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் வரவிருக்கு ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் ஆடுவதற்கு வாய்ப்பு குறைவே அஷ்வினும் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஒரு வேளை அக்சர் படேல் அடுத்த ஒரு வாரத்திற்குள் குணமடையவில்லை எனில் அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரோ அல்லது அஷ்வினோ அணியில் சேர்க்கப்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை அணியில் ஒரு தமிழர் கூட இல்லை என்கிற குறை நீங்கிவிடும்.