பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் பகுதியில் நேற்றிரவு அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, தலைமையேற்று பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், “தமிழகத்தில் உள்ள 100% மக்களில், 93% யார் இருக்கிறார்கள் என்றால்… தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் இருக்கிறார்கள். மீதமுள்ள ஆறு – ஏழு சதவிகிதம்தான் முன்னேறிய சமுதாயம். 1967-லே பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக வருவதற்கு முன்பு, இந்த 93% மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. படிப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அதனால், இந்த 6% மக்கள்தான் அனைத்திலும் பயனடைந்து வந்தார்கள். 

அண்ணா

அதை மாற்றி அனைவருக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும்; தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; இந்தியை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று சொல்லி போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்று மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர். இந்தியாவிலேயே இரண்டாவதாக காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. கேரளாவிலாவது காங்கிரஸூம், கம்யூனிஸ்டுட்ம் மாறி மாறி ஆட்சிக்கு வருகிறது. ஆனால், பேரறிஞர் அண்ணாவால் ஊன்றப்பட்ட இந்த திராவிட இயக்கம், பரிணாம வளர்ச்சி பெற்று… தி.மு.க, அ.தி.மு.க என 56 ஆண்டுக்காலமாக இந்த தேசிய கட்சிகளை ஒழித்தெரிந்திருக்கிறது. இதுவரை இங்கு அவர்களால் காலூன்ற முடியவில்லை. 

பேரறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் இல்லை என்றால் இன்றைய தமிழகம் இல்லை. அந்த 6 சதவிகிதத்தினர்தான் இன்று நாட்டை ஆண்டிருப்பார்கள். இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலங்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடுதான். தொழிற்சாலையிலும், கல்வியிலும் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் இந்த திராவிட இயக்கத்தை வித்திட்ட பேரறிஞர் அண்ணா, பெரியார்தான். 

சி.வி.சண்முகம்

அதன் சரித்திரம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்… இன்றைக்கு புதுசு புதுசாக தலைவர்கள் வந்திருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணாவை தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. 1951-ல் பேரறிஞர் அண்ணா மதுரையில் பேசியதாக ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டியிருகிறார். அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. வாய் புளித்ததா… மாங்காய் புளித்ததா… என்றவாறு உங்களை அறிவுஜீவியாக நினைத்துக் கொண்டு சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லிய அந்த சம்பவம் நடந்து 74 ஆண்டுக்காலமாகிறது. உங்களுடைய வயது 40. அப்போது உங்களுடைய அப்பா, அம்மாவிற்கே கல்யாணம் ஆகியிருக்காது.

இன்றைய தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவைப் பற்றி பேசுவதற்கு உனக்கு எந்தவித தகுதியும் கிடையாது. அண்ணாமலை சார்ந்த பா.ஜ.க கட்சி, ‘அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கிறோம்’ என்று தேசிய தலைமையால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ) பா.ஜ.க-விற்கு அடுத்தபடியாக உள்ள பெரிய கட்சி அ.தி.மு.க-தான். அது, திருவாளர்கள் ஜே.பி.நட்டா, மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜ.க. தலைமையினருக்கு தெரிந்திருக்கிறது. ஏன் உங்களுக்கு (அண்ணாமலை) தெரியவில்லையா… கண்ணு தெரியவில்லையா… காது கேட்கவில்லையா?

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

கூட்டணியில் இருந்து கொண்டே பேரறிஞர் அண்ணாவின் பெயரிலே இருக்கக்கூடிய அ.தி.மு.க-வை, எங்களுடைய தெய்வம் அண்ணாவை பற்றி தரம் தாழ்ந்து பேசுகின்ற அண்ணாமலை அவர்களுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். முன்பு எங்களுடைய அம்மாவை விமர்சனம் செய்தார். இப்பொழுது பேரறிஞர் அண்ணாவை விமர்சனம் செய்கிறார். உங்களுடைய நோக்கம் என்ன… ஆனால் உங்களுடைய தலைமை, அ.தி.மு.க-வுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என விரும்புகிறார்கள். எங்களுடைய கழக பொதுச்செயலாளர் டெல்லிக்கு சென்றிருக்கின்ற நேரம் பார்த்து, அண்ணாமலை அவர்கள் திட்டமிட்டே பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தி இருக்கிறார்… தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார். உனக்கு என்ன தெரியும் அண்ணாவைப் பற்றி… எப்போது நீ அரசியலுக்கு வந்தாய்… அரசியல் பற்றி உனக்கு என்ன தெரியும்… 

கூட்டணியில் இருந்துகொண்டே எங்களுடைய தலைவர்களை விமர்சிப்பதை பார்த்தால், அவர் ஏதோ உள்நோக்கம் வைத்துக் கொண்டிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறக் கூடாது என்று திட்டமிட்டு தி.மு.க-வுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறாரோ என்று எங்களுக்கு தோன்றுகிறது. புதுச்சேரி உட்பட இங்கு 40 நாடாளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றால், யாருக்கு நன்மை… யார் பிரதமராவர்கள்… மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வேண்டும். அ.தி.மு.க-வின் துணையின்றி அங்கு(தமிழ்நாடு) வெற்றி பெற முடியாது என்பதை பா.ஜ.க-வின் தேசிய தலைமை உணர்ந்திருக்கிறது. அதன் காரணத்தினால்தான் எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களை தனது அருகிலே அமர வைத்து மோடி அவர்கள் முக்கியத்துவத்தை கொடுக்கிறார்கள். 

நரேந்திர மோடி – அமித் ஷா

ஆனால், அதனை கலைக்கும் விதமாக அண்ணாமலையின் செயலை பார்க்கும்போது… ‘தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும்’ என்ற எண்ணம் அவருக்கு துளியும் இல்லை என தெரிகிறது. தி.மு.க-வை விமர்சிப்பதை விட்டுவிட்டு, கூட்டணியில் இருக்கின்ற எங்களை விமர்சித்து கொண்டிருக்கிறார். அம்மாவையும், அண்ணாவையும் விமர்சிக்கிறீர்கள் என்றால் உங்களுடைய நோக்கம் என்ன… யாருக்கு மறைமுகமாக உதவுகிறீர்கள். இன்று தமிழக முதலமைச்சர், அவருடைய மகன் உட்பட இந்து மதத்தை இழிவுபடுத்துகிறார்கள், இந்து மதத்தை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அ.தி.மு.க-வை பொறுத்தவரை அனைத்து மதமும் சமம். பேரறிஞர் அண்ணா என்ன சொன்னார்… ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார். அப்படிப்பட்ட இயக்கத்தில் வந்தவர்கள் நாங்கள், எங்களுக்கு அனைவரும் சமம். ‘தி.மு.க சனாதன தர்மம் பற்றி பேசி வருவதை எதிர்த்து நீங்கள் பதிலடி கொடுக்க வேண்டும்’ என்று பிரதமர் மோடி அவர்கள் சொல்கிறார்கள். 

ஆனால், இந்தியா கூட்டணியில் இருக்கின்ற தி.மு.க-வை விமர்சிப்பதை விட்டுவிட்டு, தி.மு.க-விற்கு உதவுகின்ற விதமாக…. சம்பந்தமில்லாமல், அண்ணா அவர்கள் பேசியதாக பேசாத ஒன்றை பேசினார் என்று சொல்லி இழிவுபடுத்துகிறீர்கள் என்றால் உங்களது நோக்கம் என்ன… தி.மு.க-வின் கைக்கூலியாக இன்றைக்கு அண்ணாமலை மாறி வருகிறார். உங்களுடைய போக்கை மாற்றிக் கொள்ளுங்கள் அண்ணாமலை அவர்களே! அண்ணாவைப் பற்றி அண்ணாமலைக்கு பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

அண்ணாமலை பாதயாத்திரை ஒன்று சென்று கொண்டிருக்கிறார். அது பாதயாத்திரையா… வசூல் யாத்திரையா… என்று தெரியவில்லை. வசூல் யாத்திரை என்றுதான் சொல்கிறார்கள். அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. திருவிழாவில் காணாமல்போன குழந்தைபோல் ஆகிவிட்டார் அண்ணாமலை. 

சி.வி.சண்முகம்

அதனால் தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக…. ‘நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான்’ என வடிவேல் சொல்வதுபோல… நானும் தமிழ்நாடு தலைவர்தான், நானும் தமிழ்நாடு தலைவர்தான், நானும் இருக்கிறேன், நானும் இருக்கிறேன்’ என்று சொல்வதற்காக எங்களுடைய தலைவர்களை இழிவுபடுத்தாதே. இனியும் அ.தி.மு.க தொண்டர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள், இறுதியாக எச்சரிக்கிறோம். நீ முன்னாள் ஐ.பி.எஸ் ஆபீஸர் என்றால் காந்தி வீட்டிற்கு பக்கத்து வீடா… எத்தனை ஐ.பி.எஸ் ஆபீஸர்கள் ஜெயில்ல இருக்காங்க தெரியுமில்ல. நேத்துகூட டி.ஐ.ஜி முருகன்மீது கேஸ் போட்டிருக்கிறார்கள். ஐ.பி.எஸ் படித்துவிட்ட ஆணவத்தில் பேசாதீர்கள். 

இறந்துவிட்ட தலைவர்களைப் பற்றி மரியாதையாக பேசுங்கள். கூட்டணி கட்சி தர்மத்தை மீறி இன்று அண்ணாமலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதை அவருடைய தேசியத் தலைமை கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டம் கிடையாது ராஜா..!. ஜெயித்தால் மூன்றாவது முறையாக நேருக்கு பிறகு வெற்றி பெற்ற பெருமை உங்களுக்கு கிடைக்கும். இல்லையென்றால் எங்களுக்கு ஒன்றும் கிடையாது. எங்க மேட்ச் நேரா 2026 தான். ஆனால் கூட்டணி தர்மத்திற்காக நாங்கள் உழைப்போம். 

அண்ணாமலை – சி.வி.சண்முகம்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே தி.மு.க சார்ந்த கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று அதற்கு எதிராக உள்ள அணிகள் அனைத்தும் ஒன்றிணைந்திருக்கிறது. பா.ஜ.க தலைமை எங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் பா.ஜ.க தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒற்றை நபரான அண்ணாமலை இந்தக் கூட்டணியை முறிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதேபோன்று அண்ணாமலை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால், ‘இதற்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும்’ என்று எங்கள் தலைமையிடம் நாங்களும் பேசியிருக்கிறோம்” என்றார் ஆவேசமாக.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: