வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: நாட்டில் மாற்று அரசை அமைக்க அயராது உழைக்க வேண்டும் என காங்., செயற்குழு கூட்டத்தில் கட்சியினருக்கு அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவுரை வழங்கி உள்ளார்.
காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே, கடந்தாண்டு பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழு மாற்றியமைக்கப்பட்டது. இந்த புதிய செயற்குழுவின் கூட்டம், தெலுங்கானாவின் தலைவர் ஹைதராபாதில் நேற்று துவங்கியது. இதில் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், பொதுச் செயலர் பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். லோக்சபா தேர்தல் மற்றும் விரைவில் ஐந்து மாநில சட்டசபைகளுக்கு நடக்க உள்ள தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்தனர்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் 2வது நாளாக இன்று(செப்.,17) ஐதராபாத்தில் கூடியது. கூட்டத்தில் கார்கே பேசியதாவது: 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜ.,வை வீழ்த்துவதே காங்கிரசின் நோக்கமாக இருக்க வேண்டும். நாட்டில் மாற்று அரசை அமைக்க அயராது உழைக்க வேண்டும். நமது தனிப்பட்ட நலன்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஓய்வின்றி நாம் உழைக்க வேண்டும். மேலும், நமது தனிப்பட்ட வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியின் வெற்றியை முன்னிலைப்படுத்த வேண்டும்.
ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த சர்வாதிகார அரசை துடைத்தெரிய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் புதிய பிரச்னைகளை கொண்டு வந்து முக்கியமான அடிப்படை பிரச்னைகளில் இருந்து மக்களை பா.ஜ, அரசு திசை திருப்புகிறது. சமீபத்தில் மும்பையில் “இண்டியா” கூட்டணி கட்சி கூட்டம் நடந்த போது, பா.ஜ., அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குழுவை அமைத்தது. அனைத்து மரபுகளுக்கும் முரணாக இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதி சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement