பெரியாரின் பிறந்தநாளும் நினைவுநாளும் சில விநோதங்களைக் கொண்டவை. செப்டம்பர் 17 பெரியாரின் பிறந்தநாள். பெரியாரின் கருத்தியலுக்கு நேரெதிரான சித்தாந்தத்தைக் கொண்ட நரேந்திர மோடியின் பிறந்தநாளும் செப்டம்பர் 17தான். அதேபோல் இறுதிவரை பெரியாரின் போர்வாளாக விளங்கிய நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நினைவுநாளும்கூட.

பெரியாரின் நினைவுநாளான டிசம்பர் 24தான் எம்.ஜி.ஆருக்கும் நினைவுநாள். இன்று சட்டமன்றத் தேர்தல் களத்தில் போட்டி போட்டுக்கொண்டு எம்.ஜி.ஆர் நினைவுகூரப்படுகிறார். அப்படி பெரியாரைப் போட்டிபோட்டுக்கொண்டு கொண்டாடும் சூழல் இல்லையென்றாலும் பெரியாரும் ஒருவகையில் இந்தத் தேர்தலில் மறைமுகமாகப் பேசுபொருள்தான். குறிப்பாக பா.ஜ.க. பெரியாரையும் திராவிட அரசியலையும் கடுமையான விமர்சனங்களுட்படுத்தி தி.மு.க.வை இந்துவிரோதக் கட்சியாக நிறுவுவதன் மூலம் இந்துக்களின் வாக்குகளை வெல்ல முடியும் என்று நினைக்கிறது. தேர்தல்கால சங்கடமான சூழலில் தி.மு.க. எதிர்க்குரலை உரத்து ஒலிக்காவிட்டாலும் தி.மு.க.வும் சரி, தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்கள், விடுதலைச்சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் சரி, பெரியாரை பா.ஜ.க.வுக்கு எதிரான அரணாக முன்னிறுத்துகின்றன.

அண்ணா – பெரியார் – காமராஜர்

இந்தச் சூழலுக்கு அப்பால் அரசியல்வாதிகள் பெரியாரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பல முக்கியமான பண்புகள் இருக்கின்றன. இந்த வாக்கியத்தைப் படிக்கும்போது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். பெரியார் தேர்தல் அரசியலில் பங்கேற்காதவர். தான் ஆதரித்த காமராஜரின் காங்கிரஸ், தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய தேர்தல் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தவர். அவர்கள் பெரியாரிடமிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?

முதலில் பெரியாரிடமிருந்து அரசியல்வாதிகள் மட்டுமல்ல நாம் அனைவருமே கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், எதிர்க்கருத்துகளுக்கும் இடமளிக்கும் பண்பு. அவருடைய பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்போ மூடநம்பிக்கை ஒழிப்போ அல்ல. அது சிந்தனைக்கான சுதந்திரத்தை வலியுறுத்தும் கருத்தாக்கம். அதனால்தான் அவர் ஒவ்வொருமுறை மேடையில் பேச ஆரம்பிக்கும்போதும் முடிக்கும்போதும், “நான் சொல்லும் எதையும் நான் சொல்கிறேன் என்பதற்காக ஏற்றுக்கொள்ளாதீர்கள். உங்கள் அறிவுக்கு சரி என்று பட்டதை ஏற்றுக்கொண்டு மற்றவற்றைத் தள்ளிவிடுங்கள்” என்றார்.

அவருடைய எல்லா மேடைப்பேச்சுகளின் இறுதியிலும் யாரும் அவரை எந்தக் கேள்வியும் கேட்கும் சுதந்திரம் இருந்தது. அதனால்தான் ஒருவர் பெரியாரிடம், “பெண்விடுதலை, பொதுவுடைமை எல்லாம் பேசுகிறீர்களே, உங்கள் மனைவி யாரிடமாவது போக விரும்பினால் விட்டுவிடுவீர்களா?” என்று கேட்க முடிந்தது. அவரும் பதற்றப்படாமல், “நீங்கள் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதே தவறு. என் மனைவியிடம்தான் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும். அதற்கான உரிமை அவருக்குத்தான் உள்ளது” என்றார். யோசித்துப்பாருங்கள், இப்படியான கேள்விகளை இன்றைக்கு எந்தத் தலைவரிடமாவது கேட்டுவிட முடியுமா? தனக்கு எதிர்க்கருத்து உள்ளவர்களுக்கும் அவர் மேடை அமைத்துக்கொடுத்தார். இளைஞனான ஜெயகாந்தன் ஒரு கூட்டத்தில் தன்னைக் கடுமையாக விமர்சித்தபோது அவரை ஊக்கப்படுத்தினார் பெரியார்.

பெரியாரிடமிருந்து எதைக் கற்றுக்கொள்கிறோமோ இல்லையோ அறத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்வதென்று முடிவெடுத்தபிறகு தனது நீண்டகால நண்பரும் கடுமையான அரசியல் எதிரியுமான ராஜாஜியைச் சந்தித்து ஆலோசித்தார். பிறகு பெரியார் – மணியம்மை திருமணம் நடைபெற்றது. உண்மையில் ராஜாஜி என்ன சொன்னார் என்று தெரியாது. பெரியாரைக் காரணம் காட்டிப் பிரிந்த தி.மு.க, ‘பார்ப்பன எதிர்ப்பை முன்வைத்த பெரியார், பார்ப்பனரான ராஜாஜியின் பேச்சைக் கேட்டுத் திருமணம் செய்தார்’ என்று குற்றம் சாட்டியது.

பெரியார் – கி.வீரமணி

பெரியார் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின் ஓர் இதழில் கி.வீரமணி எழுதிய ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ என்ற தொடரில்தான் ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார். மணியம்மையைத் திருமணம் செய்வதில் தனக்கு உடன்பாடில்லை என்றுதான் ராஜாஜி எழுதியிருந்தார். கடிதத்தில் ‘பெர்சனல்’ என்று எழுதப்பட்டிருந்ததால் ராஜாஜி என்ன சொன்னார் என்பதை வெளிப்படுத்தாமல் வாழ்நாள் முழுதும் பழி சுமந்து மறைந்தார் பெரியார். அத்தகைய அறமே இன்று நமக்குத் தேவை.

பொதுவாழ்க்கை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர் பெரியார். வாழ்நாள் முழுவதும் சுயமரியாதையை வலியுறுத்தியவர், அதன் பேராலேயே இயக்கம் கட்டியவர் என்றாலும் ‘பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் தன்மானத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்’ என்றார். எத்தனையோ ஏச்சுப்பேச்சுகள், வசைகள், அவதூறுகள், கூட்டங்களில் கல்லடி, செருப்படி, மலம் வீசப்படுதல் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு தன் கருத்தை வலியுறுத்தினார். எதிர்க்கருத்துக்கும் மரியாதை அளித்தார்.

தனிமனித வாழ்க்கையும் பொதுவாழ்க்கையும் ஒன்றென வாழ்ந்த பெரியார், குடும்பமே பொதுவாழ்க்கைக்குச் சுமையென கருதினார். தன் மனைவி நாகம்மை இறந்தபோது அவர் எழுதிய இரங்கல் அறிக்கை உலக இலக்கியங்களுக்கு ஒப்பானது.

“நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டிருந்தேனே அல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை.

பெண்கள் சுதந்திர விசயமாகவும், பெண்கள் பெருமை விசயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகின்றேனோ, போதிக்கிறேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஓர் அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா?

ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா?

இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா?

உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா?

ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா?

எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா?

எதுவும் விளங்கவில்லையே.”

என்றவர் “நாகம்மாள் மறைவால் எனக்கு அதிகம் சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத் தொல்லை ஒழிந்தது என்கிற உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது. இனி சுதந்திரமாக பொதுத்தொண்டில் ஈடுபடுவேன்” என்று ‘நாகம்மை மறைவு நன்மைக்கே’ என்று முடிக்கிறார்.

பேரறிஞர் அண்ணா – பெரியார்

‘பக்தி தனிச்சொத்து, ஒழுக்கம் பொதுச்சொத்து’ என்று தொடர்ந்து வலியுறுத்திய பெரியார், ‘ஒழுக்கம்’ என்று சொன்னது அறத்தையும் பொதுவாழ்வில் நேர்மையையும்தான். ஏனெனில் குடி, கற்பு, விபச்சாரம் போன்ற ஒழுக்கம் என்பது ஆளுக்காள், நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம், மதத்துக்கு மதம், காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி ‘பொதுவான ஒழுக்கம் என்பது இருக்கமுடியாது’ என்றார். ஒழுக்க விதிகள் எல்லாம் பெண்களுக்கும் ஏழைகளுக்கும் மட்டும்தான் வலியுறுத்தப்படுகிறதே தவிர ஆண்களும் வசதி படைத்தவர்களும் அதை மீறிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்,

ஒருவருக்குக் கடவுள் நம்பிக்கை, மதநம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது தனிப்பட்ட விஷயம், ஆனால் சகமனிதர்களிடம் அன்பையும் சமத்துவத்தையும் பேண வேண்டும், ”பிறர் உங்களிடம் எப்படி நடக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி பிறரிடம் நீங்கள் நடந்துகொள்வதுதான் ஒழுக்கம்” என்றார். அதனாலேயே பொதுவாழ்வில் நேர்மையை வலியுறுத்தியதுடன் அவர் வாழ்ந்தும் காட்டினார். அதற்கு இரண்டு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

பெரியார் காங்கிரஸுக்கு வருவதற்கு முந்தைய காலகட்டம். ஈரோட்டில் தன் அப்பாவுடன் மண்டி வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது சில வியாபார விஷயங்களில் அப்பாவுக்குப் பதிலாக அவருடைய கையெழுத்தை பெரியாரே போட்டிருந்தார். இது அப்போதிருந்த வணிகச் சூழலில் சகஜமான ஒன்றாகத்தானிருந்தது.

ஆனால் பெரியாரைப் பிடிக்காத சிலர் அவர்மீது ஃபோர்ஜரி என்று புகார் கொடுக்க, வழக்குப் பதியப்பட்டது. தன் மகனுக்குச் சிறை கிடைக்குமோ என்று கலங்கிப்போன பெரியாரின் அப்பா வெங்கடப்பர், வழக்கை எதிர்கொள்வதற்காக ஈரோட்டில் பிரபலமான வழக்கறிஞரை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், பெரியாரோ நீதிமன்றத்தில் பொய் சொல்ல மாட்டேன் என்று உறுதியாக மறுத்துவிட்டார். பணக்காரக் குடும்பத்தில் பிறந்த அவர், கட்டிலில் படுப்பதைத் தவிர்த்துவிட்டு, தரையில் படுத்து உறங்கத் தொடங்கினார். சிறைக்குச் சென்றால் தரையில்தான் படுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிப் படுத்துப் பழகிக்கொண்டார். நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது “அப்பாவின் கையெழுத்தை நான்தான் போட்டேன்” என்றே வாக்குமூலம் அளித்தார். அவருடைய நேர்மையைப் பாராட்டிய நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

காந்தி, பெரியார்

பிறகு பெரியார் காங்கிரஸில் இணைந்து காந்தியின் சீடராக இருந்த காலகட்டம். அப்போது ஒருவருக்குப் பெரியார் கடனாக அளித்திருந்த 50,000 ரூபாய் வசூலாகவில்லை. அதற்காக ஏற்கெனவே புரோநோட் எழுதி வாங்கியிருந்தார் பெரியார். கடன் வசூலாகாத சூழலில் நீதிமன்றத்துக்குச் சென்றுதான் பணத்தை வசூலிக்க வேண்டும் என்கிற நிலை. அன்றைய காலகட்டத்தில் 50,000 ரூபாய் எவ்வளவு விலை மதிப்புடையது என்பதைச் சொல்லத்தேவையில்லை. ஆனால் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிப்பது என்று காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதை ஏற்றுக்கொண்ட பெரியார், 50,000 ரூபாய் பணத்தை விட்டுக்கொடுக்கத் தயாரானார். அப்போது அதே காங்கிரஸில் இருந்த சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற பிரபல வழக்கறிஞர் “நீங்கள்தானே வசூலிக்கக் கூடாது? பணம் வசூலிக்கும் உரிமையை எனக்கு வேண்டுமானால் மாற்றித்தாருங்கள்” என்று கேட்டார். ஆனால் பெரியாரோ “நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்தபிறகு, அதை யார் வழியாக மேற்கொண்டாலும் தவறுதான்” என்று உறுதியாக மறுத்துவிட்டார். இத்தகைய நேர்மையும் கொள்கையில் உறுதியும் இன்று எல்லாத் தலைவர்களுக்கும் தேவையானது.

பொதுவாழ்க்கையில் ஈடுபடும் தலைவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கும் பெரியாரே உதாரணம். அன்னை மீனாம்பாள் தமிழகத்தின் முக்கியமான தலித் தலைவர். அம்பேத்கரின் ‘செட்யூல்ட் கேஸ்ட் ஃபெடரேஷன்’ அமைப்பின் தமிழகப் பிரதிநிதிகளாக மீனாம்பாளும் அவர் கணவர் சிவராஜும் செயல்பட்டார்கள். ஈ.வெ.ராமசாமிக்குப் ‘பெரியார்’ பட்டம் வழங்கிய பெண்கள் மாநாட்டின் நிர்வாகியுமாகச் செயல்பட்டவர் அன்னை மீனாம்பாள்.

1992ல் வெளியான நீதிக்கட்சி பவளவிழா மலரில் பெரியார் பற்றி அவர் இப்படி நினைவுகூர்கிறார்.

“நான் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தி இருக்கிறேன். பெரியார் அவர்கள் கலந்துகொண்ட திருமணங்களிலும் கலந்துகொண்டு பேசி இருக்கிறேன்.

சென்னை, பெரம்பூரில் என் தலைமையிலும், பெரியார் தலைமையிலும் ஒரு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி.. ஒரே சேறும் சகதியுமாகிவிட்டது. திருமணம் முடிந்து சாப்பிட்டுப் போகச் சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிடவில்லை. பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துப்போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்கமாட்டார்.”

இந்தி எதிர்ப்பு போராட்டம்

போராட்டங்களும் தியாகங்களுமே பொதுவாழ்க்கையின் அணிகலன்கள் என்று வகுத்துக்கொண்டவர் பெரியார். ‘முதல்மொழிப்போர்’ என்று அழைக்கப்படும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பெரியார் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. டிசம்பர் 5, 1938ல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, ‘எப்படியும் சிறை உறுதி’ என்று முடிவு செய்த பெரியார் படுக்கையுடன் நீதிமன்றத்துக்குச் சென்றார். அவர் எதிர்பார்த்தபடியே சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையில் இருந்த பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக்கப்பட்டார். பெரியாரின் படத்தை வைத்து ஊர்வலம் நடத்தப்பட்டது.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறோம். இன்னும் பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில்தான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்திருக்கிறோம். பெண்களுக்கான சொத்துரிமை குறித்து மத்திய அரசு கொண்டுவந்த சட்டம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சமீபத்தில்தான் உச்சநீதிமன்றம் ஏற்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் 35 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பெண்களுக்கான சொத்துரிமை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர் பெரியார். பெண்களுக்கான சட்டங்களைக் கொண்டுவருவதில் தமிழகம் முன்னோடியாக விளங்கினாலும் அரசியலில் பெண்கள் பங்கு வகிப்பது குறைவாகவே இருக்கிறது.

முற்போக்கு அமைப்புகளிலும்கூட பெண்கள் தலைமைக்கு வருவது மிகக்குறைவே. பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்களின் ஒழுக்கம் குறித்த அவதூறுகள் கட்டவிழ்க்கப்படுவது இன்றும் நீடிக்கிறது. ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால் உடனடியாகக் கட்சி ஆரம்பித்து தலைவராகி முதல்வர் கனவில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார். ஆனால் ஒரு நடிகை அரசியலுக்கு வந்தால் அவர் ஒரு கட்சியில் சேர்ந்துதான் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர உடனடியாகத் தலைவராகிவிட முடியாது.

பெரியார் பெண்களுக்காகப் பேசியவர் மட்டுமல்ல, செயல்படுத்திக்காட்டியவரும்கூட. இந்தக் காலகட்டத்தில் நாம் திருமணம் செய்யாமல் தனியாக வாழும் பெண்கள், கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள், சிங்கிள் பேரண்ட், பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள், தன்பால் ஈர்ப்பாளர்கள் ஆகியோரின் நிலை குறித்தும் உரிமை குறித்தும் பேசுகிறோம். ஆனால், பெரியாரோ 1928-ல் செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில், ‘தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விலைமகள் என்று தங்களைக் கருதிக்கொள்வோர் இந்த மாநாட்டில் சிறப்பாகக் கலந்துகொள்ள வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார். தனது வீட்டிலேயே பெண்களுக்கான முறைசாரா அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும் வசதி செய்து தந்தார். வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள், அநாதரவான பெண்கள் தங்குவதற்காக ஒரு விடுதியையும் நடத்தியிருக்கிறார்.

பெரியார்

அதேபோல் பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசிகளின் உரிமைகளுக்காக அவர்களுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோருக்குப் பின்புலமாக இருந்து தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரக் காரணமாக இருந்தார். ஆனால் முத்துலெட்சுமி ரெட்டி பின்னாளில் தன் சுயசரிதை எழுதியபோது பெரியாரைக் குறிப்பிடாதபோதும் அதுகுறித்து குற்றம் சாட்டியவரல்ல பெரியார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ‘மதிகெட்ட மைனர்’ என்று ஒரு நாவல் எழுதி வெளியிட்டார். அந்த நாவலை எழுதியவர் ஒரு பெண். அதற்கு அணிந்துரை எழுதியவர் ஒரு பெண். சாற்றுக்கவி எழுதியவர் ஒரு பெண். தன்னை முன்னிறுத்தாமல் ஈரோட்டில் உள்ள தன் அச்சகத்தில் அந்த நாவலை அச்சிட்டவர் பெரியார்.

மூன்றாவது தஞ்சை மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் 22 வயதான சின்னராயம்மாள் என்ற பெண்ணின் சார்பாக ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. 50 வயதான ஓர் ஆணுக்கு மூன்றாம் தாரமாக வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்யப்பட்டிருந்தார் சின்னராயம்மாள். ‘குழந்தை வேண்டும்’ என்று அவரின் கணவர் கட்டாய உறவுகொள்ள முயன்றபோது, சின்னராயம்மாள் வீட்டைவிட்டு வெளியேறி பெரியார் நடத்திய விடுதியில் குடிபுகுந்தார்.

குஞ்சிதம் குருசாமி, நீலாவதி, மீனாம்பாள் சிவராஜ், அன்னபூரணி, தங்கவயல் அப்பாதுரையாரின் மகள் அன்னபூரணி, எஸ்.சி.சிவகாமி,தி.சு.மாசிலாமணி, பினாங்கு ஜானகி, தருமு அம்மாள், கே.ஏ.ஜானகி அம்மாள், ஜெயசேகரி, லட்சுமி, கிரிஜா தேவி, சிதம்பரம் அம்மாள், நாகம்மை, மணியம்மை என்று ஏராளமான பெண்கள் பெரியாரியக்கத்தில் ஆளுமைகளாக விளங்கினார்கள். இவர்கள் மதம், சோஷலிசம், குடும்ப முறை என்று பல விஷயங்கள் குறித்தும் எழுதினார்கள், மொழிபெயர்த்தார்கள், பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பேசினார்கள், போராடி சிறைக்குச் சென்றார்கள். உலகளவில் ஒரு நாத்திக இயக்கத்தின் முதல் பெண் தலைவராக மணியம்மை விளங்கினார்.

அம்பேத்கர் – பெரியார்

பெரியாரைத் தமிழ் மொழியின் விரோதியாகவும் இந்துக்களின் எதிரியாகவும் தொடர்ந்து சித்திரிக்கும் பிரசாரம் நடைபெறுகிறது. அதுவும் சமூகவலைத்தளங்களில் ஆதாரமற்ற அவதூறுகளின் வழியே வேகமாகவே நடைபெறுகிறது. பெரியார் குறித்த உண்மையான வரலாற்றைத் தேடிப் படித்தால் இது எவ்வளவு அபத்தமான, ஆபத்தமான திரிபுகள் என்று உணர்ந்துகொள்ளலாம்.

நவீனம், சுயமரியாதை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தியவர் பெரியார். தமிழ் மொழி நவீனமாக வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் அதற்குத் தடையாக இருந்தவர்களைக் கடுமையாக விமர்சித்தார். அத்தகைய விமர்சனங்களில் சில வரிகளைப் பிய்த்துப்போட்டு அவரைத் தமிழ் எதிரியாகச் சித்திரிக்கும் பணி நடைபெறுகிறது. பெரியார் தொலைநோக்குப்பார்வையுடன் சிந்தித்தவர். டெஸ்ட் ட்யூப் பேபி முதல் செல்போன் வரை எதிர்காலம் குறித்த கனவுகளைச் சிந்தித்தவர். தமிழர்கள் நவீன அறிவியல் மனப்பான்மையுடன் வாழ வேண்டும், மாற வேண்டும் என்பதற்காகவே கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர். அதேநேரத்தில் திருக்குறள் மாநாடுகளை நடத்தியவரும் அவர்தான். தமிழ்மொழி உரிமைக்காகக் குரல் கொடுத்தவரும் அவர்தான். எழுத்துச்சீர்திருத்தம் என்று பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்துகளே இன்று கணிணியில் நாம் தட்டச்சு செய்வதற்கு உதவுகிறது.

இந்துமதம், கடவுள் குறித்த அவரது விமர்சனங்கள் அனைத்தும் சுயமரியாதையையும் பகுத்தறிவையும் அடிப்படையாகக் கொண்டவை. ஒருவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அங்கே அவர் சுயமரியாதையுடன் நடத்தப்படுகிறாரா என்பதுதான் அவர் முன்வைத்த கேள்வி. அதனால்தான் கடவுள் மறுப்பாளராக இருந்தபோதும் கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்களின் சுயமரியாதைக்காக ஆலய நுழைவுப் போராட்டத்தையும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கக் கோரி போராட்டங்களையும் நடத்தினார். பெரும்பான்மை இந்துக்கள் சாதியின் பெயரால் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டபோது அவர்களின் பிரதிநித்துவத்துக்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார். இதைப் புரிந்துகொண்டதால்தான் குன்றக்குடி அடிகளார் உள்பட எத்தனையோ ஆத்திகர்கள் பெரியாரைக் கொண்டாடினர்.

பெரியார்

பெரியாரிடமிருந்து தனிமனிதர்கள் முதல் பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் வரை கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. பெரியாரை ஏன் நினைவுகூர வேண்டும் என்றால் நாம் அறத்தைக் கற்றுக்கொள்ள!

பெரியாரை யார் நினைவுகூர வேண்டும்? ஒடுக்கப்பட்டவர்கள் நினைவுகூர வேண்டும், பெண்கள் நினைவுகூர வேண்டும், கருத்துச்சுதந்திரத்தை வலியுறுத்துபவர்கள் நினைவுகூர வேண்டும், சிந்திக்கும் உரிமை பெற்றவர்கள் நினைவுகூர வேண்டும், தமிழர்கள் நினைவுகூர வேண்டும், மனிதர்கள் நினைவுகூர வேண்டும்!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *