நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சிறப்பு அமர்வு செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். ஆனால் இது வழக்கமான கூட்டத்தொடர் என்றும், தற்போதைய மக்களவையின் 13-வது அமர்வு என்றும், மாநிலங்களவையின் 261-வது அமர்வு என்றும் அரசு தரப்பில் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது. மே 28 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜக்தீப் தன்கர்

இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாடாளுமன்றத்தின் பல்வேறு துறை ஊழியர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டிருக்கிறது. இதனிடையே இந்திய குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் இன்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். இந்த விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ராஜ்ய சபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேகவால், வி.முரளீதரன் மற்றும் இரு அவைகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஆனால் இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கலந்துகொள்ளவில்லை. மேலும், விழாவிற்குக் காலதாமதமாக அழைக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து, மாநிலங்களவை பொதுச்செயலாளர் பிரமோத் சந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கொடியேற்றும் விழாவுக்கான உங்கள் அழைப்பை செப்டம்பர் 15-ம் தேதி மாலையில் பெற்றதில் ஏற்பட்ட ஏமாற்றத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சி நிரல்கள் மிகவும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதால், அதில் கலந்துகொள்ள நான் தற்போது ஹைதராபாத்தில் இருக்கிறேன்.

மல்லிகார்ஜுன கார்கே

செப்டம்பர் 17-ம் தேதி இரவுதான் நான் டெல்லி திரும்புகிறேன். எனவே நாளை (இன்று) காலை திட்டமிடப்பட்ட விழாவில் கலந்து கொள்வது சாத்தியமில்லை” எனத் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, இன்று மாலை 4:30 மணிக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் 75 ஆண்டுக்கால பயணத்தை இரு அவைகளும் முதல் நாளில் விவாதிக்கும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் நியமனம் தொடர்பான மசோதா, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: