புதுச்சேரி- முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான மூன்று நாள் சிறப்பு முகாம் இன்றுடன் முடிகிறது.
சுகாதாரத் துறை, ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரைடு, அப்பலோ புரோட்டான் கேன்சர் சென்டர் ஆகியவை சார்பில் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான மூன்று நாள் முகாம் ஸ்க்ரீன் டு வின் என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது. முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இம்முகாமை கவர்னர் தமிழிசை நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, அப்பல்லோ மார்பக அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் மஞ்சுளா ராவ், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி மருத்துவ பிரிவு தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அப்பலோ மருத்துவமனையின் மருத்துவ வாகனத்தில் டிஜிட்டல் மோமோகிராம், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இ.சி.ஜி., உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டது. 500 பெண்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
டாக்டர் மஞ்சுளா ராவ் கூறுகையில், மார்பக புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிவது அவசியம், எனவே இந்த முகாம் மூலம் மார்பக புற்றுநோயை பற்றி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
