ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது ஆசியான் – இந்தியா ஒத்துழைப்பை பலப்படுத்த 12 அம்ச திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்தார்.

‘ஆசியான்’ அமைப்பின் 43-வது உச்சி மாநாடு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு,

ஜகார்த்தாவில் நேற்று நடைபெற்றது. இதில், 12 அம்ச திட்டத்தை தாக்கல் செய்து, பிரதமர் மோடி பேசியதாவது:

> தெற்கு – கிழக்கு ஆசியா – இந்தியா – மேற்கு ஆசியா – ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார வழித்தடம் ஏற்படுத்த வேண்டும்.

> இந்தியாவின் பொது சேவை டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை ஆசியான் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது.

> எதிர்கால டிஜிட்டல் திட்டங்களுக்காக ஆசியான் – இந்தியா நிதியம் ஏற்படுத்தப்படும்.

> ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியா அமைப்புகளின் பொருளாதார, ஆராய்ச்சி மையங்களுக்கு தேவையான உதவியை இந்தியா வழங்கும்.

> சர்வதேச அரங்குகளில் தெற்கு நாடுகளின் குரல் ஒருமித்து ஒலிக்க வேண்டும்.

> தெற்கு நாடுகளின் பிரச்சினைகளை எழுப்புவதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

> இந்தியாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையத்தோடு ஆசியான் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

> சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியாவின் ‘லைஃப்’ இயக்கத்துடன் ஆசியான் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

> மக்கள் மருந்தகம் திட்டத்தின் வெற்றி அனுபவங்களை ஆசியான் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது.

> தீவிரவாத அமைப்புகளுக்கான நிதியுதவியை தடுப்பது, இணையவழி தாக்குதலை எதிர்கொள்வதில் ஒருமித்து செயல்பட வேண்டும்.

> பேரிடர் தடுப்பு தொடர்பான இந்தியாவின் சிடிஆர்ஐ அமைப்புடன் ஆசியான் நாடுகள் இணைய வேண்டும்.

> சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.இதை நிறைவேற்ற ஆசியான் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஜகார்த்தாவில் கிழக்கு ஆசிய கூட்டமைப்பின் உச்சி மாநாடும் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடிபேசியபோது, ‘‘சர்வதேச விதிகளின்படி இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். தென்சீனகடல் பகுதியில் உள்ள அனைத்துநாடுகளின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்’’ என்றார்.

சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை: இந்திய, பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி செய்து வருகிறது. சீன அரசு சமீபத்தில் வெளியிட்ட வரைபடத்தில் பல்வேறு நாடுகளின் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு இந்தியா, மலேசியா, தைவான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சூழலில், ‘இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்’ என்று ஆசியான் – இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய கூட்டமைப்பு ஆகிய இரு உச்சி மாநாடுகளிலும் வலியுறுத்தப்பட்டதன் மூலம், சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரு மாநாடுகளிலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக சீன பிரதமர் லீ கியாங் கலந்து கொண்டார். ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய கூட்டமைப்பின் உச்சி மாநாடுகளில் திமோர்-லெசுடே நாட்டின் பிரதமர் ஜனானா குஸ்மாவோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்த நாட்டில் விரைவில் இந்திய தூதரகம் திறக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: