நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோலாகலமான பண்டிகைகளில் ஒன்றுதான் விநாயகர் சதுர்த்தி. முழு முதல் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் பிறந்தநாள் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அறிவு, ஞானம், கல்வி ஆகியவற்றுக்கான கடவுளாகவும் எந்த விஷயத்தை முதலில் செய்தாலும் விநாயகரை வணங்கித்தான் செய்ய வேண்டும் என்ற ஐதீகமும் இன்று வரை தொடருகிறது.
இந்தப் பண்டிகை ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் எவ்வாறு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமும் ஊர்வலமும் மூன்று நாட்களுக்கு பிரசித்தி பெற்ற நடைபெறுமோ, அதே போல வடமாநிலங்களில் 3 – 10 நாட்கள் வரை விசேஷமாக விநாயகர் சதுர்த்தி நடைபெறும். கணேஷ் உத்சவ் அல்லது கணேஷ் சதுர்த்தி என்று கூறுவார்கள்.
செப்டம்பர் 19 தொடங்கி செப்டம்பர் 28 வரை 10 நாட்களும் கோலாகலமாக கணேச உத்சவ் கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் தேதிகள், சுப முகூர்த்த நேரம், சடங்குகள் மற்றும் பிரசாதமாக வட மாநிலங்களில் என்ன உணவுகளை எல்லாம் படைப்பார்கள் என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சுப முகூர்த்த தினம் மற்றும் நேரம்
10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், முக்கிய திதியான சதுர்த்தி திதி செப்டம்பர் 18-ம் தேதி அன்று நண்பகல் 12:39 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 19 ஆம் தேதி மதியம் 1:43 மணிக்கு முடிகிறது. விநாயக சதுர்த்தி அன்று அவரவர் வசதிக்கேற்ப, சக்திக்கேற்ப புதிதாக விநாயகர் சிலைகளை வாங்கி அலங்கரித்து வீட்டில் பிரதிஷ்டை செய்வார்கள்.
எனவே முதல் நாள் நண்பகல் தொடங்கி மறுநாள் நண்பகல் வரையில் சதுர்த்தி திதி இருப்பதால் 19 ஆம் தேதி அன்று மதியம் வரும் முகூர்த்தத்தில் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபடலாம்.
விநாயகர் வழிபாடு செய்வதற்கான சரியான முகூர்த்த நேரம் என்பது செப்டம்பர் 19 ஆம் தேதி காலை 11:01 மணி முதல் மதியம் 1:28 மணி வரையாகும். சதுர்த்தி திதி, செப்டம்பர் 18 மதியம் இருந்தாலும் கூட செப்டெம்பர் 18 காலை 9:45 மணி – மாலை 8:44 மணி வரை விநாயகர் சிலையை வைக்கக் கூடாது.
விநாயகர் சதுர்த்தி 2023: கொண்டாட்டம் தொடங்கியதன் வரலாறு
பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் கணேஷ் சதுர்த்தி அல்லது விநாயக சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்படும். அவரவர் வீட்டில் இதற்கான விசேஷமாக பூஜை செய்து, விநாயகருக்கு பிடித்த பண்டங்களை சமைத்து நைவேத்தியமாக வைத்து கொண்டாடுவது ஒரு பக்கம் இருக்கும்.
மற்றொரு பக்கம் அவரவர் வசிக்கும் தெரு அல்லது சமூகங்கள் எந்த சின்ன சின்ன குழுவாக சேர்ந்தும் கொண்டாடுவார்கள். இதை தவிர்த்து சிறியது முதல் விண்ணை முட்டும் அளவுக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.
ஆனால், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் முதன்முதலாக மகாராஷ்டிர மாநிலத்தில்தான் தொடங்கியது என்று கூறப்படுகிறது.
மராட்டிய மன்னரான சிவாஜி மகாராஜாவால் இந்த பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் இதைக் கொண்டாட வேண்டும் என்றும் இந்துக்களுடைய பாரம்பரியத்தை வளர்த்து, மக்களிடையே ஒற்றுமையை அதிகரிக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைந்து கொண்டாட வேண்டும் என்று மன்னர் ஊக்குவித்ததாக கூறப்படுகிறது.
தொடக்கத்தில் மகாராஷ்டிராவில் மட்டுமே விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி, காலம் செல்ல செல்ல இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அதற்கு பிறகு தற்பொழுது உலகம் முழுவதிலும் கூட விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட நேபாள், மொரிஷியஸ், தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வாழும் இந்தியர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகர் சதுர்த்தியின் முக்கியத்துவம்:
சிவபெருமான் மற்றும் பார்வதியின் மூத்த மகனாக அவதரித்தவர் தான் விநாயகர். இவருடைய பிறந்தநாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. எந்த கடவுளுக்குமே இல்லாத அளவுக்கு ஒரு விலங்கின் தலையை தன்னுடைய தலையாக வைத்திருக்கும் ஒரே இறைவன் விநாயகர் மட்டும் தான்.
விநாயகர் அறிவு, ஞானம், அதிர்ஷ்டம், செல்வ வளம் மற்றும் செழுமை ஆகியவற்றுக்கு அதிபதி ஆவார். விநாயகரை வணங்கி வருபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தடைகளை நீக்கி நல்ல வளமான எதிர்காலத்தை அருள்வார் என்பதும் ஐதீகம். வீடுகளை விதவிதமாக அலங்கரிப்பதில் இருந்து பல விதமான உணவுகளையும் பிரசாதங்களையும் சமைத்து, விநாயகரை ஊர்வலமாக கொண்டு வந்து, பூஜை செய்து மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தான் விநாயகர் சதுர்த்தி. எனவே இது மக்கள் தங்களுடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள் என்பதன் அடையாளமாகவும் திகழ்கிறது.
விநாயகர் சதுர்த்தி: விநாயகர் பிறந்த கதை
இந்துக்களின் புராணங்களில் படி விநாயகர் அவதரித்த கதை மிகவும் தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். ஏற்கனவே பலரும் இந்தக் கதையை பற்றி திரைப்படங்களாக பார்த்திருப்பீர்கள் அல்லது கதையாகவும் கேட்டிருப்பீர்கள்.
சிவபெருமான் இல்லாத பொழுது தன்னைப் பாதுகாப்பதற்கு ஒரு நம்பிக்கையான தைரியமான பாதுகாவலர் வேண்டும் என்ற காரணத்தினால், பார்வதி தேவி தன் உடலில் பூசி இருந்த மஞ்சள் மற்றும் சந்தனத்தில் இருந்து விநாயகருக்கு உயிர் கொடுத்தார்.
பார்வதி தேவி குளித்து கொண்டிருக்கும் பொழுது அந்த இடத்துக்கு காவலாக விநாயகர் இருந்தார். அப்பொழுது சிவபெருமான் உள்ளே நுழைய முயற்சிக்கும் பொழுது சிவபெருமானையே விநாயகர் தடுத்துவிட்டார். அதில் கோபம் கொண்ட சிவபெருமான் விநாயகரின் தலையை துண்டித்தார். நடந்ததை கேள்விப்பட்ட பார்வதி, அதீத கோபம் கொண்ட மகா காளியாக உருமாறினார்.
காளியின் கோபம் பிரபஞ்சத்தையே அழித்து விடும் என்பதால், தன்னுடைய தவறை உணர்ந்த சிவபெருமான், துண்டித்த தலையை ஒன்று சேர்க்க முடியாது என்று ஒரு விலங்கின் தலையை கொண்டு வந்தால் மீண்டும் விநாயகருக்கு உயிர்ப்பிக்க முடியும் என்று ஒரு யானையின் தலையை கொண்டு வந்து விநாயகருக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.
இது, பிறப்பு, இறப்பு மற்றும் மறுபிறவி எடுப்பது என்ற சுழற்சியைக் குறிக்கிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவில் செய்யப்படும் 4 முக்கிய சடங்குகள்
1. பிராணப் பிரதிஷ்டை: விநாயகரின் சிலைக்கு உயிர் கொடுப்பது. சிலையை வாங்கி வந்து, அலங்கரித்து, மந்திரங்கள் ஜபித்து, பூஜை செய்வதைக் குறிக்கும்.
2. 16 வகை நைவேத்தியங்களுடன் வழிபாடு: விநாயகர் சதுர்த்தி அன்று, 16 வகையான பொருட்களை நைவேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். இதில், பூக்கள், ஊதுபத்தி, நீர், விளக்குகள் ஆகியவையும் அடங்கும்.
3. உத்தர பூஜை: 10 நாட்கள் கொண்டாடப்படும் இடங்களில், இறுதி நாளன்று பண்டிகை நிறைவேறுவதையொட்டி, உத்தர பூஜை செய்து, விநாயகரின் ஆசியைக் கோருவார்கள்.
4. கணபதி விஸார்ஜன்: 10 ஆம் நாளன்று, கணபதி சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று ஆறு அல்லது கடலில் கரைத்து வருவதைக் குறிக்கும்.
விநாயகர் சதுர்த்தி பூஜை செய்முறை:
வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் விநாயகரை எந்த இடத்தில் வைக்கப் போகிறீர்களோ, அந்த இடத்தை சுத்தம் செய்து அலங்கரித்து வைக்க வேண்டும். விநாயகரை மனையில் வைத்து பூஜை செய்வதற்கு முன் விநாயகரை, அதில் கோலம் போட வேண்டும்.
* இரண்டு நபராக விநாயகர் சிலையைக் கொண்டு வர வேண்டும்.
* வீட்டுக்குள் கொண்டு வரும் முன்பு ஆரத்தி எடுக்க வேண்டும்.
* விநாயகர் சிலை மீது நீர் தெளித்து, பூஜை செயம் மனையில் வைக்க வேண்டும்.
* பின்னர், மாலை, வஸ்திரம், பூக்கள், மஞ்சள், குங்குமம் என்று அலங்கரிக்கலாம்.
* விளக்கு மற்றும் ஊதுபத்தி ஏற்றி பூஜையைத் தொடங்கலாம்.
* விநாயகர் சிலையை பூக்கள் விளக்குகள் உள்ளிட்டவை கொண்டு அலங்கரிக்கலாம். பூஜைக்கு பழங்கள், இனிப்புகள், வழக்கமான பூஜை செய்ய நீங்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், ஊதுபத்தி, கற்பூரம்,
* வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் உள்ளிட்டவற்றை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
வீரப்பனால் கொல்லப்பட்ட வனத்துறை அதிகாரி… கோவில் கட்டி வணங்கும் கர்நாடகா கிராம மக்கள்
இதைத் தவிர, முக்கடலை சுண்டல், கொழுக்கட்டை, பாயசம், போளி, லட்டு, புளி சாதம், எலுமிச்சை சாதம், உள்ளிட்டவற்றை குளித்த பின்பு சமைத்து நைவேத்தியம் தயார் செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.