சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம், தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தை ஜெஜியாங் மாகாணத்தின் டெகிங் பகுதியில், ஆகஸ்ட் 28-ம் தேதி கொண்டாடியது. இதை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான தேசிய வரைபடம் ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்துக்கு ‘தெற்கு திபெத்’ எனப் பெயரிட்டும், கடந்த 1962-ம் ஆண்டு போரில் ஆக்கிரமித்த பகுதியை ‘அக் ஷய் சின்’ என்றும் சீனா குறிப்பிட்டிருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் தெனனாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கிடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசிய பிரமதர் நரேந்திர மோடி, ‘இந்தியா – சீனா எல்லைப் பகுதிகளில் தீர்க்கப்படாத பிரச்னைகள் கவலையளிப்பதாக’ தெரிவித்தார். அதோடு, ‘இந்தியா – சீனா உறவு இயல்புநிலைக்குத் திரும்ப எல்லையில் அமைதி நிலவுவது முக்கியம்’ எனப் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் வினய் தெரிவித்தார்.

இப்போது வெளியாகியிருக்கும் புதிய வரைபடம் குறித்து சீன இயற்கை வளங்கள்துறை அமைச்சகத்தின் திட்டமிடல்துறைத் தலைவர் வூ வென்சாங், “நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் வரைபடம், புவியியல் அமைப்புத் தகவல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இயற்கை வளங்கள் மேலாண்மை, சூழலியல் மற்றும் நாகரிகங்களை உருவாக்கவும் இவை உதவுகின்றன” என்று கூறியிருக்கிறார்.
நிலைமை இவ்வாறு இருக்க, சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு, சர்வதேச விதிமுறைகளை மீறி, அடுத்த நாடுகளின் எல்லைகளை உரிமைகொண்டாடுவதில் மிக மோசமான வியூகங்களைப் பயன்படுத்துகிறது எனக் குற்றம்சாட்டியிருக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இது சீனாவின் பழைய பழக்கம். நமது பகுதிகள் எவையெவை என்பதில் இந்த அரசு மிகத் தெளிவாக இருக்கிறது. அபத்தமாக உரிமை கோருவதன் மூலம், அடுத்த நாட்டின் பகுதிகள் சீனாவுடையது ஆகாது” என்றார்.
“சீனா இதுபோல் கூறுவது முதன்முறையல்ல. இது போன்ற முயற்சிகளுக்கு, இந்தியா ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருக்கிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி. புதிதாகப் பெயர் வைப்பதால், உண்மை நிலவரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது” என்கிற கருத்தை முன்வைத்திருக்கிறார் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் அரிந்தம் பாக்சி.

இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை மீண்டும் தலைதூக்கியிருக்கும் நிலையில், “லடாக்கில் ஓர் அங்குல நிலத்தைக்கூட சீனா கைப்பற்றவில்லை என்று பிரதமர் கூறினார். ஆனால், சீனா உண்மையில் நம் நிலத்தைக் கைப்பற்றியிருக்கிறது. நமது நிலத்தை சீனா அபகரித்திருப்பது லடாக் முழுவதற்கும் தெரியும். அருணாச்சலப் பிரதேசத்தின் வரைபடத்தின் விஷயம் தீவிரமானது. இதற்குப் பிரதமர் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி.
இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை இன்று, நேற்று நடந்த ஒரு நிகழ்வல்ல!
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, அக்டோபர் 23, 1962-ம் ஆண்டு சீனா, பூட்டான் எல்லையை ஒட்டிய வடகிழக்கு இந்தியாவின், தொலை தூர இமயமலைப் பகுதியில் சீன வீரர்கள் நுழைந்து தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர். இன்று அது பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்களைக்கொண்ட இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசமாக அறியப்படுகிறது. அதைத் தனது பிரதேசம் என்று தொடர்ந்து சீனா உரிமை கோரிவருகிறது. இதன் உச்சகட்டமாக கடந்த ஓராண்டில் இந்தியா – சீனாவுக்கிடையே இந்தப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடுவது யார் என்கிற போட்டி தீவிரமடைந்திருக்கும் நிலையில் இப்போது, இந்தப் பகுதியைத் தனது நாட்டின் வரைபடத்துடன் இணைத்திருக்கிறது சீனா.

ஆசியாவின் இரண்டு பெரிய, அணு ஆயுதம்கொண்ட அண்டை நாடுகளான இந்தியா, சீனாவின் அத்துமீறல்கள், ஊடுருவல்களுக்காக ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் கூற்றுப்படி அருணாச்சலப் பிரதேசத்தின் 1,126 கி.மீ நீளமுள்ள கிழக்கு எல்லை, சீனாவால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாதது. அது மேக்மோகன் கோடு மூலம் உருவாக்கப்பட்டது. 1914-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு செயலராக இருந்த ஹென்றி மெக்மோகன் என்ற ஆங்கிலேயரின் நினைவாக இது அழைக்கப்படுகிறது. ஆனால், சீனா அருணாச்சலப் பிரதேசத்தின் மீதான தனது உரிமை கோரலைக் கைவிடவில்லை. இன்னும் பெரும்பாலான பகுதிகளை ‘தெற்கு திபெத்’ என குறிப்பிட்டுவருகிறது.
முன்னதாக டெல்லியிலிருந்து நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட அருணாச்சலப் பிரதேசம், 1987-ல் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. இது சீனாவுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக இந்தியாவும் எல்லையில் பாதுகாப்பையும் உள்கட்டமைப்பையும் பலப்படுத்தியது. அதற்கு அருகில் கிராமங்களை உருவாக்கிவருகிறது. அதோடு, அருணாச்சலப் பிரதேசத்துக்கு இந்தியத் தலைவர்களின் வருகை சீனாவை எரிச்சலூட்டியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2008-ம் ஆண்டு அந்த மாநிலத்துக்குச் சென்று சாலை அமைக்கும் திட்டப் பணிகளை அறிவித்தபோது, சீனா முறையாக எதிர்ப்பு தெரிவித்தது.
அந்த மாநிலத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கடனளிப்பதை எதிர்த்தது. இதோடு நில்லாமல், இந்திய ராணுவ அதிகாரிகளுக்கும், அந்தப் பகுதியிலுள்ள அதிகாரிகளுக்கும் விசாவை மறுத்தது. இதையடுத்து, 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, அருணாச்சலப் பிரதேசத்தின் தொலைதூர, புறக்கணிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்த 2,000 கி.மீட்டருக்கு புதிய சாலைகள் அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்.

பெயர் மாற்றமும், சீனாவின் புதிய சட்டமும்!
அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள பல இடங்களின் பெயர்களை கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று முறை மாண்டரின் மொழியில் மாற்றியிருக்கிறது சீனா. இந்தப் பெயர் மாற்றங்கள் அனைத்தும் நரேந்திர மோடியின் ஆட்சியின்போதுதான் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கிடையே, கடந்த ஆண்டு அக்டோபரில் புதிய எல்லைச் சட்டத்தை நிறைவேற்றிய சீனா, கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அதை அமல்படுத்தியது. இந்தச் சட்டத்தின்கீழ், சீனாவுடன் எந்த எல்லையில் தகராறு இருக்கிறதோ, அந்த நிலம் சீனாவின் அதிகார வரம்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எல்லைப் பகுதிகளில் ‘கட்டுமானப் பணிகளை’ மேம்படுத்துவது, கட்டுமானத்துக்கான துணைத் திறனை வலுப்படுத்துவது போன்றவையும் புதிய சட்டத்தின் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அருணாசலப் பிரதேசத்தின் 15 குடியிருப்புப் பகுதிகள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றுக்கு சீனா தன் மொழியில் பெயர் சூட்டியது. சீனாவின் இந்த நடவடிக்கையை இந்தியா கண்டித்து, அந்தப் பெயர்களை நிராகரிப்பதாக அறிவித்திருப்பதோடு, `பெயரை மாற்றுவதால் கள யதார்த்தம் மாறாது’ என்றது.
இந்திய-சீனா மோதல்களும் பொருளாதாரச் சிக்கல்களும்!
சீன ஆக்கிரமிப்பு மற்றும் பெயர் மாற்றம், வரைபடங்களில் இணைப்பது குறித்து இந்தியா பதிலளிப்பது வெறும் ராணுவம் தொடர்பானது மட்டும் அல்ல. அரசியல் மற்றும் வணிக நலன்கள் சார்ந்தும் இருக்கிறது. ஒருவேளை கடுமையாக இந்தியா சீனாவுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்தால், அது எப்போது, எப்படி பதிலளிக்கும் என்பதை இந்தியா சிந்திக்கவேண்டியதும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், பொருளாதாரரீதியாகவும், அந்த நாட்டின் பலத்துனும் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமானதாக இருக்கிறது. அதன்படி பார்க்கும்போது, 2022-ம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 18 ட்ரில்லியன் டாலராகவும், இந்தியாவின் ஜிடிபி 3.5 ட்ரில்லியன் டாலருக்குக் குறைவாகவும் இருந்ததை இங்கு கவனிக்க வேண்டும். அதனடிப்படையில், கடந்த ஆண்டு சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 230 பில்லியன் டாலர் ஆகும். இது இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகம்.
ஆசியாவின் மிக முக்கிய இரு நாடுகளுக்கிடையே எல்லை விவகாரத்தில் தொடர்ந்து மோதல் போக்கு நீடிப்பதை உலக நாடுகள் உற்று கவனித்துவருகின்றன!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY