நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் அரசியல் களமாடி வருகின்றன. காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு “இந்தியா” எனப் பெயர் வைத்து, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் கூடி ஆலோசித்து வருகின்றன. பா.ஜ.க-வும் தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை செய்து, தேர்தல் வியூகங்களை வகுக்கிறது.

பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டுடன் இருக்கும் பிஜு ஜனதா தளம், ஆந்திரா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவின் பி.ஆர்.எஸ், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் உள்ளிட்ட கட்சிகளுக்கு `இந்தியா’ கூட்டணி அழைப்பு விடுக்கவில்லை. இந்த நிலையில், ஹைதராபாத் எம்.பி-யும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவருமான ஓவைசி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “எனக்கு கூட்டணிக்கு அழைப்பு விடுக்காதது பற்றி நான் கவலைப்படவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் வடகிழக்கில் உள்ள சில கட்சிகள், மகராஷ்டிராவில் உள்ள சில கட்சிகளும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை.
மூன்றாவது அணியை உருவாக்கி சில கட்சிகளை இணைக்குமாறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவைக் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். அரசியல் வெற்றிடம் இருக்கிறது. கே.சி.ஆர் தலைமை தாங்கி முன்னெடுத்துச் சென்றால் அந்த வெற்றிடம் நிரம்பிவிடும். ஏனென்றால் இந்தியா கூட்டணியால் இந்த வெற்றிடத்தை நிரப்பமுடியாது” என்றார்.