மதுரை: “மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. மதிமுகவுக்காக உழைக்கும் உண்மை தொண்டருக்கு இந்த வாய்ப்பை அளித்தால் மகிழ்வேன்” என்று மதுரை மதிமுக மாநாட்டில் வைகோவின் மகனும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ பேசினார்.
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி, மதுரையில் மதிமுக மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் வைகோவின் மகனும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ பேசியது: “30 ஆண்டுகளாக அண்ணாவின் பிறந்தநாளை மாநாடாக கொண்டாடும் ஒரே இயக்கம் மதிமுக. மதம் சமத்துவத்தை பரப்ப வேண்டும். அடிமைத்தனத்தை அல்ல. வள்ளலார், அம்பேத்கர் என பல பெரியோர்களும் இதைத்தான் சொல்கின்றனர்.
நீ உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற ஏற்றத் தாழ்வை உருவாக்கியது சனாதனம். சுய மரியாதையை குழிதோண்டி புதைத்தது. சனாதனத்தால் திறமை, விருப்பத்தால் கல்வி, வேலையை தீர்மானிக்க முடியாது. சாதிதான் இதை தீர்மானிக்கும். குழந்தை திருமணத்தை வலியுறுத்துகிறது சனாதனம். உடன்கட்டை ஏறச் சொல்கிறது. பெண்கள் மிகவும் இழிவாக நடத்தப்பட்டனர். மேலாடை அணியக் கூடாது உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை தகர்க்கத்தான் 100 ஆண்டுகளாக திராவிட அரசியல் செயலாற்றுகிறது.
முகலாயர்கள், கிறிஸ்தவ மிஷினரிகளால் அழி்க்க முடியாத சனாதனத்தை திராவிடத்தால் அழிக்க முடியுமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்கிறார். இவர்களால் செய்ய முடியாததை திராவிட அரசியல் செய்து காட்டியுள்ளது. சனாதன தர்மத்தின் முதுகெலும்பை 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பெரியார் போன்றவர்களால் முறித்துவிட்டனர். சனாதனத்தை ஆதரிக்கும் இயக்கம் இருக்கும்வரை சாதிய கொடுமை இருக்கத்தான் போகிறது. மனிதநேயத்துக்கு எதிரான சனாதன தர்மத்தை முழுமையாக அகற்றுவது அனைவரின் கடமை.
மதிமுகவை உயர்ந்த இடத்துக்கு இட்டுச்செல்லும் கடமை அனைவருக்கும் உள்ளது. 20 வயதில் பொதுவாழ்வு பயணத்தை துவங்கிய வைகோவின் பயணம் 60 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தொடர்கிறது. அவரது உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளரவில்ல. இறுதி மூச்சுவரை அவரது உயிர் இயக்கத்துக்காக துடித்துக்கொண்டே இருக்கும். அரசியலில் அவர் விரும்பிய இலக்கை அடையாமல் இருக்கலாம். ஆனால், லட்சணக்கான தொணடர்களின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றுள்ளார். இதற்கு ஈடு, இணை ஏதுமில்லை. மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வைகோ இன்று நிம்மதியாக உறங்கச் செல்வார். இதற்கு முக்கிய காரணமாக இருந்த எம்எல்ஏ பூமிநாதன் உள்ளிட்டோருக்கு நன்றி.
3 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுகவின் எதிர்காலம், தொண்டர்கள் நலன் கருதி சுமையை பகிர்ந்துகொள்ள அரசியலுக்கு வந்தவன் நான். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தொண்டர்களான உங்களால் இழுத்து வரப்பட்டவன் நான். மதிமுக வெற்றியில் எளியவனான எனது பங்கும் உண்டு. அனைவரும் பாராட்டும் வகையில் வைகோவின் வாழ்க்கை தொடர்பான ஆவணப்படத்தை தயாரித்தேன். உலக தலைவர்கள் பலரும் பாராட்டினர். 3 ஆண்டுகளுக்கு முன்பு வைகோவுக்கு உடல்குறைவு ஏற்பட்டது. அனைவருக்கும் அதிர்ச்சி. பொய்யான செய்திகளை பரப்பி உருவாக்கப்பட்ட சதித்திட்டத்தை தகர்க்க உதவியுள்ளேன். தனிப்பட்ட விறுப்பு, வெறுப்பு எனக்கு கிடையாது.
வைகோ இந்த நாட்டுக்காக எவ்வளவோ செய்து்ள்ளார். நான் அரசியலில் ஆர்வம் காட்டியதில்லை. அப்படி இருக்கும்போது எனக்குப் பதவி ஆசை எப்படி வரும். ஏற்கெனவே வந்த வாய்ப்பை மறுத்தவன் நான். வைகோ எம்பி பதவிக்கு போட்டியிடாமல், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற தொண்டரை வெற்றி பெறச் வைத்தார். பலமுறை மத்திய அமைச்சர் வாய்ப்பை மறுத்தார். பிரதமராக இருந்த வாஜ்பாய் வைகோவை அமைச்சராக்க வற்புறுத்தியும் மறுத்தேவிட்டார். வைகோ உள்ளிட்ட நிர்வாகிகளிடம் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றேன். மதிமுக தொண்டன் என்ற ஒன்றே போதும். முதன்மை செயலாளர் பதவி பெரிதல்ல.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் விருதுநகரில், திருச்சியில், பெரம்பலூரில் போட்டியிட வேண்டும் என்ற விவாதம் இயக்க தோழர்களிடம் நடைபெற்று வருகிறது. நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன். தலைமைக்கும், தலைமை கழக நிர்வாகிகளுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எனக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. தலைமைக்கும், கட்சி தோழர்களுக்கும் பக்கபலமாக இருக்கும் ஒருவரை தேர்வு செய்து போட்டியிட வைக்கலாம். தேர்தல் முடிந்த பிறகு மதிமுக புதிய உத்வேகத்துடனும், புதுப்பொலிவுடனும் செயல்படுகிறது என்ற செய்தியை நான் கேட்க வேண்டும்” என்று துரை வைகோ பேசினார்.